ஜனவரி -25
நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்தக் கட்டங்களில் வேக -வேகமாக அடி எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டதால் தமிழக அரசியலில் இனி பரப்பரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தோன்றுகிறது. அதனால் தான் முதலமைச்ச மு.க.ஸ்டாலினும் பெயர் சொல்லாமல் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
காவல்துறை விதித்த கட்டுபாடுகளையும் தாண்டி கடந்த வாரம் பரந்தூர் சென்று அங்கு புதிய விமானம் நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளசை் சந்தித்த விஜய், பரந்தூர் மண்ணைத் தொட்டு தமது அரசியல் பயணத்தை தொடங்குவதாக தெரிவித்தார்.
இதன் அடுத்தக் கட்டமாக த.வெ.க.வின் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டு உள்ளார். நிர்வாக வசதிகளுக்காக தமிழ்நாட்டை 120 மாவட்டங்களாகப் பிரித்து அதில் 19 மாவட்டங்களுக்கு பெயர்களை அறிவித்து இருக்கிறார். மற்ற மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பெயர் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என்றும் தவெக வட்டாரம் தெரிவித்து உள்ளது.
கடந்த அக்டோபரில் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்திய விஜய் அதன் பிறகு ஒன்றிரண்டு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. தீவிரமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்தச் சூழலில் பரந்தூர் பயணமும் மாவட்டச் செயலாளர்கள் பற்றிய அறிவிப்பும் அரசியல் களத்திற்கு விஜய் தயாராகி விட்டதை உறுதிப்படுத்தி விட்டன.
இதை மனதில் வைத்துக் கொண்டுதான் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பேசுகையில் “கட்சி தொடங்கிய உடனேயே சிலர் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்” என்று விஜயின் பெயரைச் சொல்லாமல் மறைமுகமாகச் சாடியிருக்கிறார்.
அடுத்ததாக விஜய் விரைவாக மதுரை, கோவை, திருச்சிப் போன்ற இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி அரசுக்கு சவால் விட்டால் அரசியல் களம் களைக் கட்ட ஆரம்பித்து விடும்.
சூடான சுவையான விவாதங்களை காண்பதற்கு மக்களும் காத்திருக்கிறார்கள்.
*