உச்ச நட்சத்திரங்களான ரஜினிக்கும், விஜய்க்கும் உலக முழுக்க
ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
30 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக போக்கு காட்டிக்கொண்டிருந்த ரஜினி, அரசியலே வேண்டாம் பெரிய கும்பிடு போட்டுவிட்டு, சினிமாவில் முழு மூச்சாக இறங்கிவிட்டார்.
அரசியல் குறித்து மருந்துக்கு கூடஎதுவும் கோடிட்டு காட்டாமல் இருந்த விஜய் அரசியல் குளத்தில் குதித்துள்ளார்,.
.
இந்த நிலையில் அண்மையில், விஜய் குறித்து ரஜினி ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பேசிய பதிவு வைரலானது. விஜய் மீது முட்டையை வீச வேண்டும் என்றும், வேறு சில விஷயங்கள் குறித்தும் ரஜினியின் ஆள் பேசியிருந்தார்.
இது சர்ச்சையை உருவாக்கியது. இதனை சாக்காக வைத்து ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இணையவழி யுத்தம் தொடங்கினர்.
சண்டையை வளரவிட ரஜினி விரும்பவில்லை. தனது தரப்பில் இருந்து ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “ரஜினிகாந்தின் ரசிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் நடிகர் விஜய்க்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் கண்டிக்கத்தக்கது. இத்தகைய கருத்துகள் ஏற்க முடியாதவை. மேலும் உண்மையான ரஜினி ரசிகர்கள் யாரும் இப்படிபட்ட செயலில் ஈடுபட மாட்டார்கள்.
ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இத்தகைய எதிர்மறையான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதை அல்லது பகிர்வதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பது தேவையற்ற பகைமையையும் பிளவுகளையுமே உருவாக்குகிறது.
அதே நேரத்தில், அனைத்து ரசிகர்களும் கண்ணியத்தையும் பரஸ்பர மரியாதையையும் காத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
திரைப்படம் என்பது மக்களை ஒன்றிணைப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, அது பிளவை ஏற்படுத்துவதற்காக அல்ல. ரசிகர் என்ற உணர்வின் பெயரில் எந்த நடிகருக்கும் அல்லது சகமனிதருக்கும் எதிராக வெறுப்பை பரப்பக் கூடாது’என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி தரப்பில் இருந்து அவரது பி.ஆர்.ஓ ரியாஸ் அஹ்மது இதனை வெளியிட்டுள்ளார்.
இவர்தான், விஜய்க்கும் பி.ஆர்.ஓ.என்பது குறிப்பிடத்தக்கது.
–