நடிகர்கள் அரசியலுக்கு வரும்போதெல்லாம் ,அரசியல்வாதிகள் மிரள்வது வாடிக்கையாகி விட்டது.
காரணம்- எம்.ஜி.ஆர்.
50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அ.தி.மு.க.வை ஆரம்பித்ததும், தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்து போனது.காங்கிரஸ் கிட்டத்தட்ட கரைந்தே போனது.
பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர் கட்சி தொடங்கி கரைஏறாததால், விஜயகாந்த், தே.மு.தி.க.வை ஆரம்பித்த போது தலைவர்கள் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.ஆனால் தனித்து போட்டியிட்டு தமிழகம் முழுவதும் 10 சதவீத வாக்குகளை அள்ளினார்.பா.ம.க. கோட்டையான விருத்தாசலத்தில் வாகை சூடினார்.
வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் மற்றும் தலித் ஓட்டுகளை அவர் அறுவடை செய்திருந்தார்.இதனால் விஜய்காந்த் மீது டாக்டர் ராமதாசுக்கு தீராத பகை உண்டு.
விஜய்காந்த் வெற்றிக்கு பிறகு,யாராவது ஒரு நடிகர் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கிசுகிசு வந்தால் போதும், தலைவர்கள்பொங்கி எழுந்து, ஆக்ரோஷம் காட்டுவது வழக்கமாகி விட்டது.
ரஜினிகாந்த் -ஒரு உதாரணம்.
இப்போது நடிகர் விஜய், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் உத்தேசத்தில் காய்கள் நகர்த்தி வருவதால் .பல்வேறு கட்சி தலைவர்களும் பதற்றம் அடைந்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பதற்றத்தோடு கோபம், எரிச்சல்ஆத்திரம் என அத்தனை உணர்ச்சிகளும் முகத்தில் கொப்பளிக்கிறது.
ஏன்?
விஜயும், விஜய்காந்த் போன்று, தலித் ஓட்டுகளை அள்ளப்போகிறார்.அம்பேத்கரை படியுங்கள் என விஜய் சொல்லி இருப்பதன் மூலம் , தலித் இளைஞர்கள் விஜயை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர். அதனால் தான் திருமாவளவன் இப்படி கொட்டித்தீர்த்துள்ளார்:
‘’ விஜய் அரசியலுக்கு வருவதால் ஒன்றுமில்லை.சினிமாவில் இருப்பவர்கள் புகழ் இருந்தால் போதும், முதல்வராகி விடலாம் எனும் எண்ணத்தோடு அரசியலுக்கு வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே இந்த சாபக்கேடுஇருக்கிறது’’ என விரக்தியின் விளிம்பில் நின்று புலம்பியுள்ளார்.
நடிகர்களை சாபக்கேடு என விமர்சிக்கும் திருமாவளவன்தான், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ‘எங்கள் முதலமைச்சர் வேட்பாளர்விஜயகாந்த்’ என பிரகடனம் செய்து பிரச்சாரம் செய்தார் என்பதை மக்கள் மறக்கவில்லை.
அது போகட்டும். வரும் மக்களவை தேர்தலில் , நடிகர் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி விட்டது.அந்தக் கூட்டணியில் தான் திருமாவும் இருக்கிறார்.
‘’ எனது சிதம்பரம் தொகுதியில் சாபக்கேடுகள் பிரச்சாரம் செய்யக்கூடாது’’ என கமலை மறைமுகமாகவாவது திருமாவளவன் விமர்சிக்க முடியுமா?
இந்தக் கேள்விக்கான விடையை அறியப் பொறுத்திருப்போம்.
- குழலான்.
- 000