June 20, 23
விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியமலை சுத்தப்படுத்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவிக்கு வைர நெக்லஸை பரிசாக அளித்தார் நடிகர் விஜய். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், பெற்றோர் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகிய தலைவர்கள் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் மாணவ மாணவிகளை நாளைய வாக்காளர்களே என்றுதான் அழைத்தார் விஜய். விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசிய வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் பேச்சு குறித்து பேசிய அரசியல் தலைவர்கள் பலரும் விஜய்யின் அரசியல் வருகைக்கான முதல் மேடைதான் இது என்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 53 ஆண்டுகளுக்கு முன்பு மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராடிய 3 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 54-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றார் அண்ணாமலை.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் அளித்த அண்ணாமலை யார் ஒருவர் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், ஊழலை ஒழக்கக் கூடிய ஒரு கட்சியை உருவாக்கப் போறேன் எனக்கூறி அரசியலுக்கு வருகிறாரோ அவரை பாஜக வரவேற்கும் என்றார். மேலும் அனைத்துக் கட்சியினரும் மக்களிடம் தங்களின் கொள்கைகள் குறித்து கூறுவோம், மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் வரட்டும் என்றும் கூறினார்.
மக்கள்தான் எஜமானர்கள் என்ற அண்ணாமலை விஜய் அரசியலுக்கு வரவேண்டுமென்று நினைத்தால் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் எந்த தீய சக்தியாவது இதை தடுக்க முற்பட்டால் தமிழக மக்கள் விடமாட்டார்கள் என்றும் கூறினார். தமிழக அரசியலை சுத்தப்படுத்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.