விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளதாகவும், அதிமுக vs திமுக என்ற நிலை மாற வழியே இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எதிர்காலத்தில் பிரதமராக தகுதி உள்ளவர் எடப்பாடி பழனிச்சாமியே என்று கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், உப்புக்கு சப்பாக தான் அந்த கூட்டம் நடைபெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் அதைப்பற்றி ஏன் பேசவில்லை என்றும், ராகுலை பிடிக்கவில்லையா அல்லது காங்கிரஸ் உடன் திமுக-வுக்கு உரசல் ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மனதில் வைத்தே அமித்ஷா சொன்னதாகவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
யார் யாரோ தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக்கொள்ளும் போது, விஜய் ஏன் வரக்கூடாது? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.