June 17, 23
அம்பேத்கர் உள்ளிட்ட சமூகநீதி தலைவர்களை படியுங்கள் என மாணவர்களுக்கு நடிகர் விஜய் வழிகாட்டியிருப்பதற்கு எனது பாராட்டுக்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் 12ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்க இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். குறிப்பாக 600க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக அளித்தார். இதனை தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் எனவும், வருகங்கால வாக்காளர்களான நீங்கள் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது எனவும் கூறினார். இதேபோல் கல்வி மட்டுமே அழிக்க முடியாது சொத்து எனவும் அசுரன் திரைப்பட வசனத்தை மேற்கொள்காட்டி பேசினார். விஜயின் இந்த பேச்சுக்கு பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜயின் கல்வி தொடர்பான செயல்பாடுகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன்,நடிகர் விஜய்யின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது. விஜய்யின் செயல்பாடு மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அம்பேத்கர் உள்ளிட்ட சமூகநீதி தலைவர்களை படியுங்கள் என விஜய் வழிகாட்டியிருப்பதற்கு பாராட்டு.