ஆகஸ்டு,09-
மலையாளதிரை உலகில் இருந்து கோடம்பாக்கம் குடி பெயர்ந்து வெற்றிக்கொடி நாட்டிய பிரியதர்ஷன், பாசில்,ஜோஷி வரிசையில் இடம் பெற்ற மற்றொரு டைரக்டர் சித்திக்.
வசனகர்த்தாவாக சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.. 1989-ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார். எல்லாமே ஹிட்.
தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு நகைச்சுவை காட்சிகள், ஏதாவது ஒரு டிவியில் தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறது.
2004ஆம் ஆண்டு விஜய்காந்த் நடித்த ’எங்கள் அண்ணா’ படத்தை இயக்கினார். அந்தப் படத்திலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் பேசப்பட்டன. மலையாளத்தில் தான் இயக்கிய’ பாடிகார்ட்’ படத்தை விஜய்யை வைத்து 2011-ஆம் ஆண்டு காவலன் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.அதுவும் வெற்றி. .
கடைசியாக அவர் தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், மலையாளத்தில் பிக் பிரதர் படங்களை இயக்கியிருந்தார். கார்த்திக் நடித்த வருஷம் 16 உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்துள்ளார்
நிமோனியா மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு திடிரென மாரடைப்பும் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சித்திக் நேற்று இரவு 9 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 63.
000