தக்காளி மட்டுமல்ல இஞ்சி , பச்சை மிளகாய் போன்றவற்றின் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது. துவரம் பருப்பு விலையை கேட்டால் மயக்கம் வந்துவிடும்.
சென்னையில் கடந்த சில நாட்களாக தெருமுனை காய்கறி கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை கூட விற்கப்படுகிறது. ஒரு நாள் விலை இருபது ரூபாய் குறைவதும் மறு நாள் பத்து ரூபாய் ஏறுவதுமாக தக்காளி விலை நம்மை நிலை குலையச் செய்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஒரு கிலோ இஞ்சி ரூ.200- லிருந்து ரூ.300- ஆகவும் பூண்டு ரூ.80- லிருந்து ரூ.160- ஆகவும் சின்ன வெங்காயம் ரூ.80 லிருந்து ரூ.130- ஆகவும் பச்சை மிளகாய் ரூ.55-லிருந்து ரூ.100-ஆகவும் கூடியிருக்கிறது
இது ஒரு புறம் என்றால் துவரம் பருப்பின் விலை, மொத்த விற்பனையில் கிலோவிற்கு ரூ.30- முதல் ரூ.60- வரை அதிகரித்து இருக்கிறது. இப்போது ஒரு கிலோ துவரம் பருப்பு விலை ரூ 160 ஆகும். உளுத்தம் பருப்பு ஒரு கிலோ ரூ 100- க்கு விற்ற நிலை மாறி இப்போது ரூ 150- க்கு விற்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.300- க்கு விற்பனையாகி வந்த சீரகம் விலை இப்போது ரூ 700- ஆக கூடியிருக்கிறது. புளி விலையும் கிலோ ரூ 160- லிருந்து 200- ஆக எகிறி இருக்கிறது.
இதனால் சென்னையில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மளிகை செலவு இந்த ஜுலை முதல் வாரத்தில் 1500 ரூபாய் வரை கூடியிருக்கிறது. சென்னையில் மட்டுமல்ல மற்ற ஊர்களிலும் நிலமை இதே தான்.
மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் துவரம் பருப்பு தேவையை விட குறைவாக உள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதே போன்ற காரணத்தால் மற்ற பருப்பு வகைகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் ஏற்றம் அடைந்துள்ளதாக சென்னை கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பொருட்கள் விற்பனைக்கு வராவிட்டால் இந்த விலை உயர்வு தீபாவளி வரை நீடிக்கும் என்பது வணிகர்களின் கருத்தாக உள்ளது.
000