கதாநாயகர்களின் பிம்பத்தை கட்டமைப்பதில் தூண்களாக இருப்பவர்கள் வில்லன்கள்.
சினிமாக்களில் எதிர்மறை கதாபாத்திரங்களின் வலிமையும், கொடுமையும்தான், ஹீரோக்களை,ரசிகர்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு செல்கிறது.
எம்.ஜி.ஆருக்கு நம்பியார்.
ரஜினிக்கு ரகுவரன்.
அதுபோல் பிரகாஷ்ராஜ், பல நாயகன்களின் வெற்றிக்கும், படங்களின் வசூலுக்கும் பிரதான காரணமாக இருந்துள்ளார்.
அந்த படங்கள் குறித்த சின்ன தொகுப்பு:
ஆசை.
கே.பாலசந்தரின் மாணவரான வசந்த், வணிக ரீதியாக கொடுத்த பெரிய வெற்றிப்படம் ஆசை. அஜித்தை, உச்சத்துக்கு உயர்த்திய படமும் இதுவே.
அஜித் ஹீரோ என்றாலும் வில்லன் பிரகாஷ்ராஜ்தான் படத்தை முழுவதுமாக தன் தோளில் சுமந்தார்.மனைவியின் தங்கையை அடைய பிரகாஷ்ராஜ் போடும் திட்டங்களும், குரூரங்களும்,உடல்மொழியும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.
உதிரிப்பூக்கள் படத்தில் விஜயன் ஏற்கனவே,இதே கதாபாத்திரத்தை அனாயாசமாக செய்திருந்தாலும் பிரகாஷ்ராஜ், ஆசை படத்தில் வேறு ஒரு பரிமாணம் காட்டி இருந்தார்.பிரகாஷ்ராஜ் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் மனோஷ் கே.ஜெயன். பாலசந்தர் தான், பிரகாஷ்ராஜை வசந்திடம் சிபாரிசு செய்தார்.
ஐயா.
சரத்குமார் கேரியரில் முக்கியமான படம், ஐயா. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை தமிழுக்கு அறிமுகம் செய்த படம்.
’அப்பா’ சரத்குமாரை தீர்த்துக்கட்ட பிரகாஷ்ராஜ் நகர்த்தும் காய்கள், அந்த முயற்சிகளை மகன் சரத்குமார் முறியடிக்கும் சாதுர்யம் தான் படத்தின், இழை.
பிரகாஷ்ராஜின் வசன உச்சரிப்பும், மூர்க்கமும் அனைத்து தரப்பினரையும் கட்டிப்போட்டு,தயாரிப்பாளர் பணம் ஈட்டுவதற்கு, மூல காரணமாய் அமைந்தது.
கில்லி.
இயக்குநர் தரணி கடை சியாக கொடுத்த வெற்றிப்படம் கில்லி.தெலுங்கில் உருவான ‘ஒக்குடு’ படத்தின் ரீமேக்.
விஜய் ஹீரோ என்றாலும் படத்தை மக்களிடம் நெருக்கமாக கொண்டு போய் சேர்த்தவர்கள் இசை அமைப்பாளர் வித்யாசாகரும், வில்லன் பிரகாஷ்ராஜும்தான்.
மதுரை தாதா முத்துப்பாண்டியாக வாழ்ந்து காட்டி இருந்தார், பிரகாஷ்ராஜ்.இந்த படத்தின் கதையே அவரை சுற்றித்தான் பின்னப்பட்டிருந்தது.
விஜயை ரசிகைகள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடவும், தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தை கடன் சுமையில் இருந்து மீட்கவும் பிரகாஷ்ராஜே அடித்தளமாக இருந்தார் என்பதே, கில்லி சொல்லும் உண்மை.
-சினிமேன்.
000