செப்டம்பர்.08-
பல தமிழ் இயக்குநர்களுக்கு, அந்த இருக்கை சவுகரியமாக இருப்பதில்லை. உழைப்பு அதிகம். ஊதியம் குறைவு.படம் ஓடாவிட்டால்,வீட்டிலேயே உட்கார வேண்டிய சூழலும் உண்டு.
ஆனால் நடிகன் வேடம் என்பது சொகுசு நாற்காலி மாதிரி. பத்து நாளோ, இருபது நாளோ கால்ஷீட் கொடுத்தோமா , கையில் காசு வாங்கினோமா என சுலபமாக முடியும் வேலை அது.
இதனால் தான் பல வெள்ளிவிழாப்படங்களை கொடுத்த ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் போன்றோர் அரிதாரம் பூச ஆரம்பித்தனர். முன் ஏர் சென்ற வழி பின் ஏர் செல்லும் என்பது போல், மனோபாலா, ராஜ்கபூர் உள்ளிட்டோரும் டைரக்ஷனை ‘கெட்டகனவாக’ மறந்து முழு நேர நடிகர்கள்ஆனார்கள்.
இந்த நிலையில் ஹீரோ நடிகர்களுக்கு, ’புதிய ஜாக்பாட்’அடிக்க தொடங்கியுள்ளது. அவர்கள் வில்லனாக நடித்தால், படங்களுக்கு ஒரு புதிய கலர் கிடைக்கும் என்பதால், வில்லனாக நடிக்க ஹீரோக்களை தேடி கொழுத்த பணத்துடன் வாய்ப்புகள் வருகின்றன.
விஜய் சேதுபதி ‘பேட்ட’படத்தில் வில்லனாக நடித்தார். 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல். தொடர்ச்சியாக மாஸ்டர், விக்ரம் என வில்லன் வேடங்களுக்கே முக்கியயத்துவம் கொடுத்தவர் இப்பொது , பாலிவுட் வரைக்கும் வில்லனாக கோலோச்சுகிறார்.
அடுத்து எஸ்.ஜே.சூர்யா. இவர் வலி, குஷி, நியூ என வரிசையாக மூன்று ஹிட் சினிமாக்கள் அளித்தார். நியூ படத்தில் நாயகனாக அவதாரம் எடுத்தார்.படம் பெரும் வெற்றி. இதனால் இயக்கத்தை துறந்தார்.அடுத்தடுத்து சூர்யா ஹீரோவாக நடித்த அ.ஆ, கள்வனின் காதலி போன்ற பட ங்கள் தோல்வி அடைந்தன. இதனால் வில்லன் வேடங்கள் தேடி வந்தன. மள மளவென ஒப்புகொண்டார். இப்போது சூர்யா, ஷங்கர் இயக்கும் இந்தியன் -2 மற்றும் அவரது இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களில் வில்லனக நடித்து வருகிறார். விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு வில்லன் வேடம்.
இவர்களை விடுங்கள்.உலகநாயகன் கமலும் வில்லனக நடிக்க ஆரம்பித்து விட்டார்.பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் கமல்தான் வில்லன். 30 நாள் கால்ஷீட்டுக்கு 150 கோடி ரூபாய் சொளையாக கொடுத்தால், வில்லன் வேடத்தில் நடிக்க கசக்குமா என்ன?
000