தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின் மண்ணும் செழித்துள்ளது; மக்களும் செழித்துள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளர்ர்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் “வேளாண் வணிக திருவிழா 2023” உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் வேளாண் வணிக கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது..
வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும், உயிரோடும் தொடர்புடையது. ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோல், வேளாண் துறை ஆகும்.
ஆட்சியாளர்களாகிய நாங்கள் பெயர் பெற வேண்டுமென்று சொன்னால், உழவர்கள் உரிய சிறப்பையும், வளத்தையும் பெற்றாக வேண்டும். நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டு காலமாக உழவர்களுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை பார்க்கிறோம்.
திமுக அரசு அமைந்ததும், வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை மற்றுமொரு துறை என்று நினைக்காமல் வேளாண்மையை முதன்மையான துறையாக நாங்கள் நினைக்கின்ற காரணத்தால்தான், இத்தகைய வளர்ச்சியை எட்ட முடிந்தது.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்,முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், வேளாண் நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம், நீர்ப்பாசன நவீன மயமாக்கல் திட்டம், வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை, மண்வள மேலாண்மை இளைஞர்களைத் தொழில் முனைவோர் ஆக்குதல் ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் மண்ணும் செழித்துள்ளது, மக்களும் செழித்துள்ளார்கள். பாசனப் பரப்பு அதிகமாகி உள்ளது. உற்பத்தியும் அதிகமாகி இருக்கிறது. கடந்த 2 ஆண்டு காலத்தில் உழவர் நலத்துறை செய்த பல்வேறு செயல் திட்டங்கள் தான் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.
உணவு தானிய உற்பத்தியில் மகத்தான சாதனை செய்யப்பட்டுள்ளது. 120 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11 விழுக்காடு அதிகம். சுமார் 79 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தியும் 36 இலட்சம் மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தியும் 5 லட்சம் மெட்ரிக் டன் பயறு உற்பத்தியும் செய்யப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்ய ஜூன் 12 ஆம் நாளே மேட்டூர் அணையைத் திறந்து விட்டிருக்கிறோம். காவிரி டெல்டா உழவர்களுக்காக 61 கோடி ரூபாய்க்கு குறுவை தொகுப்பு உதவித் திட்டத்தை வழங்கினோம். அரிசி மட்டுமல்லாமல், சிறுதானிய உற்பத்தியிலும், பயறு உற்பத்தியிலும் சாதனை படைத்திருக்கிறோம். பருத்தி, தென்னை என அனைத்திலும் கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது. உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல், கடன் வழங்குதல், மானியம் வழங்குதல் ஆகியவற்றில் அக்கறையோடு செயல்பட்டோம்.
காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாருவதற்கும் முன்னுரிமை அளித்திருக்கிறோம். இவை அனைத்தும் சேர்ந்து தமிழ்நாட்டில் மாபெரும் வேளாண் புரட்சியை நடத்தி உள்ளன. இதற்கெல்லாம் மகுடம் வைக்கக்கூடிய விழாவாக வேளாண் வணிகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வேளாண்மை என்பது வாழ்க்கையாக, பண்பாடாக இருந்தாலும், அது லாபம் தரும் தொழிலாக முழுமையாக இன்னும் மாறவில்லை. அப்படி உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நினைப்பதால்தான் வேளாண் வணிகத் திருவிழாவை நடத்துகிறது. வெறும் “அக்ரி எக்ஸ்போ”ஆக இல்லாமல் இது “அக்ரி பிசினஸ் எக்ஸ்போ”ஆக நடத்தப்படுகிறது.
உழவர்கள் உற்பத்தியாளர்களாக இருந்துவிடக் கூடாது. அவர்களே விற்பனையாளர்களாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் உழவர் சந்தைகளை கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அமைத்துக் கொடுத்தார். அதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் வேளாண் பொருட்களை உழவர்கள் விற்பனை செய்து பயன்பெற்றார்கள்.
திமுக அரசு மீண்டும் அமைந்ததும், சுமார் 100 உழவர் சந்தைகளை மீண்டும் புத்தொளி பெற வைத்தோம். புதிதாக 10 உழவர் சந்தைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உழவர் சந்தைகளில் இருக்கும் காய்கறி கழிவுகளை உரமாக்குவதற்கு அலகுகள் நிறுவப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாபெரும் தொழில் நிறுவனங்கள் கண்காட்சிகள் நடத்தும் இடத்தில் வேளாண் கண்காட்சி நடத்தப்படுவது சிறப்பானது, இது ஒரு மிகப் பெரிய சாதனை. பாசனப் பரப்பு அதிகமாக வேண்டும். அதன் மூலமாக உற்பத்திப் பெருக வேண்டும். உற்பத்தியான பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். உரிய விலையின் பயன்கள் உழவர்களுக்கு கிடைக்க வேண்டும். தரமான வேளாண் பொருட்கள் மக்களுக்கு உரிய விலையில் கிடைக்க வேண்டும். ஏற்றுமதி பெருக வேண்டும்.
வேளாண்மையில், நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருகிறது. தண்ணீர் பிரச்சினை இல்லை. வேளாண் பணியாளர்கள் கிடைக்கிறார்கள். இவை அனைத்தையும் உழவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து அவர்களை மாதக் கணக்கில் தகிக்கும் வெயிலிலும், நடுங்கும் குளிரிலும், தலைநகரில் போராட வைத்தது மத்திய பாஜக அரசு. பல நூறு பேர் உயிரிழந்த பின்னும், விவசாயிகளின் உறுதிக் குறையாததைக் கண்ட பின்னர்தான், அவர்கள் பின் வாங்கினார்கள். இதுதான் உழவர் விரோத மத்திய பாஜக அரசு. ஆனால், திமுக அரசு எப்பொழுதும் உழவர்களின் நண்பனாக இருக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை சார்பில் தொடங்கி உள்ள கண்காட்சி நாளையும் நடைபெற உள்ளது. வேளாண் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் 176 நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.
வேளாண் கருவிகள், விளை பொருட்கள்,மதிப்பு கூட்டு பொருட்கள், இயற்கை உரங்கள், மண் சார்ந்த படைப்புகள் என நூற்றுக்கணக்கான வேளாண் உற்பத்தி பொருட்கள் அரங்குகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
000