May 15,2023
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், விஷ சாராயத்தை கண்டுபிடித்து ஒழிப்பதற்கு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். விஷ சாராய வேட்டையில் ஈடுபட மாவட்ட எஸ்பி, ஆணையர், மதுவிலக்கு போலீசாருக்கு டிஜிபி ஆணையிட்டுள்ளார்.
மேலும், ஆலை, மருத்துவமனை, ஆய்வகத்தில் உள்ள மெத்தனாலை பயன்படுத்தி விஷ சாராயம் தயாரிப்பா என கண்டறிய அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.