ஏப்ரல்.27
வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி மோசடி செய்த மாற்றுத்திறனாளி நபர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இந்த நிலையில், கடையில் வாங்கிய கோப்பையை கொண்டு, தான் ஆசியகோப்பை வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றதாகக் கூறி, அமைச்சர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அண்மையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து அரசு வேலையும் கோரியிருந்தார். இது தொடர்பான வினோத் பாபுவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து உண்மையான விளையாட்டு வீரர்கள் வினோத்பாபு மீது உளவுத்துறையிடம் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் உளவுத்துறையினர் விசாரித்ததில், வினோத்பாபுவிடம் பாஸ்போர்ட்டே இல்லை என்பதும், அவர் வெளிநாடு செல்லவில்லை என்பதும் உறுதியானது. பின்னர், அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் போலியான நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில் உண்மையான வீல்சேர் கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்,வினோத்பாபுமீது 406 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.