மே.20
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்துவருகிறது. வேலூர், திருத்தணி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்துகிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாளை (மே.21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மே 22 மற்றும் 23ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.