ஆகஸ்டு,09-
மக்களவை உறுப்பினர் எனும் முறையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு டெல்லியில் உள்ள துக்ளக் சாலையில் 12-ம் எண் கொண்ட வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த இல்லத்தில் அவர் வசித்து வந்தார்.
கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர், பிரதமர் மோடியை அதே பெயர் கொண்ட மற்ற சிலருடன் சேர்த்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
’’மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்துவிட்டார்’ என குற்றம் சாட்டி குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி என்பவர், சூரத் உயர்நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மறுநாளே ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது.இதையடுத்து துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவில் இருந்தும் ராகுல்காந்தி வெளியேற்றப்பட்டார்.
குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தது.இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை அவரது தகுதி இழப்பு திரும்பப் பெறப்பட்டு, அவர் மீண்டும் எம்பி ஆனார். 4 மாத இடைவெளிக்குப் பிறகு, அவை நடவடிக்கைகளில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
இந்நிலையில், துக்ளக் லேனில் ராகுல் வசித்து வந்த பழைய பங்களாவையே அவருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்து, வீடு ஒதுக்கீடு செய்யும் குழு ஆணை பிறப்பித்துள்ளது.
எந்த வீட்டிலிருந்து ராகுல்காந்தி வெளியேற்றப்பட்டாரோ, அதே வீட்டில் அவர் மீண்டும் குடியேற உள்ளார்.
000