ஏப்ரல்.29
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையம் வரும் மே 6-ம் தேதி நேரில் சென்னை விசாரணை நடத்தவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், டி.என்.ஏ பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, மூன்று பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை முடிந்து விட்ட நிலையில், எட்டு பேர் பரிசோதனைக்கு வர மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, 2வது கட்டமாக புதிதாக 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையமானது வரும் மே மாதம் 6ம் தேதி வேங்கைவயல் சென்று நேரில் விசாரணை நடத்தவுள்ளது.