May 30, 2023
மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்த யாத்ரீகர்களின் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் அறிவித்தார் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார்
ஜம்முவில் இன்று காலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 55க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து தவறி விழுந்த விபத்தில், இந்த சோக சம்பவம் நடைபெற்றதாக ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று, (2023, மே 30) செவ்வாய்கிழமை காலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்தது. பேருந்தில், மாதா வைஷ்ணோ தேவி அலயத்திற்குக் செல்வதற்காக வந்த யாத்ரீகர்கள் இருந்தனர். ஜம்மு மாவட்டத்தில் உள்ள கத்ராவில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ஜஜ்ஜர் கோட்லி அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற மாதா வைஷ்ணவ் தேவிக் கோவில் திரிகூட மலையின் உச்சியில் அமைந்துள்ளது, இந்தக் கோவிலுக்கு செல்வதற்கு, திரிகூட மலையின் அடிவாரத்தில் உள்ள கத்ரா நகரம் அடிப்படை முகாமாகும்.
ஜம்மு காஷ்மீரின் கத்ராவை நோக்கி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து சென்றுக் கொண்டிருந்த பேருந்து, வழிமாறி சென்று இந்த விபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.