‘’சூப்பர்ஸ்டார்’ ரஜினியை வைத்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் டைரக்ட் செய்த படம் ‘ எந்திரன்’. கோடி, கோடியாக வசூல் குவித்தது, இந்தப்படம்.
‘இந்த படத்தின் கதைக்கரு எனக்கு சொந்தமானது’-எனது நாவலை காப்பி அடித்து ‘எந்திரன்’ எடுக்கப்பட்டுள்ளது’ என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ,ஷங்கர் மீது குற்றம் சுமத்தினார்.
அத்தோடு நில்லாமல் சென்னை எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். ‘எந்திரன்’ பட கதை விவகாரத்தில் காப்புரிமை மீறல் நடந்துள்ளது’என ஆரூர் தமிழ்நாடன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, ஷங்கரின் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 3 சொத்துகளை முடக்கியது.
இதனால் கொந்தளித்துள்ள ஷங்கர், நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :
: ‘எந்திரன்’ படக் கதை தொடர்பாக ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில், அவரது கோரிக்கையை உயர் நீதிமன்றம், நிராகரித்துவிட்டது. ஆனால், அதை புறக்கணித்துவிட்டு, இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தன்னிச்சையான அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத் துறையினர் எனது சொத்துகளை முடக்கியுள்ளனர்- இது சட்டவிரோதம்.
இது குறித்து அமலாக்கத் துறையிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த தகவலும் வரவில்லை- ஊடகங்கள் வாயிலாக, இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளது. – இது அதிகார துஷ்பிரயோகம் – அமலாக்கத் துறை அதிகாரிகள் இதை மறுபரிசீலனை செய்து, தங்கள் நடவடிக்கைகளை இத்துடன் நிறுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன் – இல்லை என்றால், சட்டரீதியாக மேல்முறையீடு செய்வதை தவிர எனக்கு வேறுவழியில்லை’ என ஷங்கர் தெரிவித்துள்ளார்.
—–