சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து உரையாற்றினார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் 49-வது லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.
இந்த போட்டியை காண அனிருத், நயன்தாரா, விக்னேஷ் சிவன், தனுஷ், லோகேஷ் கனகராஜ், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் மைதானத்தில் குவிந்தனர். கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து ஓபிஎஸ் போட்டியை கண்டு களித்தார்.
இந்த நிலையில் போட்டிக்கு இடையே ஓபிஎஸ், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியதாக தெரிகிறது. சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன. அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் செயல்பட்டுவருவதாக ஈபிஎஸ் அணி குற்றஞ்சாட்டிவரும் நிலையில், இந்த சந்திப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.