அமேதி தொகுதியில் களம் இறங்க ராகுல் முடிவு.. காங்கிரசார் உற்சாகம்.

ஆகஸ்டு,08-

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை காரணமாக அவரதுஎம்.பி.பதவி பறிக்கப்பட்டது.

அந்த தண்டனைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததால், அவருக்கு மீண்டும் எம்.பி.பதவியை மக்களவை செயலகம் வழங்கியது.

இதனை அமேதி மக்களவை தொகுதி காங்கிரசார் கோலாகலமாக கொண்டாடினர்.

51 கிலோ எடை கொண்ட லட்டை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் இரும்புக்கோட்டையாக இருந்த அமேதி தொகுதி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பாஜகவிடம் வீழ்ந்தது.

பாஜகவின் ஸ்மிருதி ராணி, ராகுலை 55, 120 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

எனினும் வயநாடு தொகுதியில் வென்றதால் ராகுல், மக்களவைக்குள் நுழைய முடிந்தது.

கடந்த தேர்தலை தவிர்த்து அமேதியில் பெரும்பாலும் நேரு குடும்பமே வெற்றி பெற்று வந்துள்ளது.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் ராகுல் 2 லட்சத்து 90 ஆயிரத்து 855 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

2009 ஆம் ஆண்டு ராகுல் 3 லட்சத்து 70 ஆயிரத்து 198 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.

2014 ஆம் ஆண்டு தேர்தலிலும் ராகுலுக்கே ஜெயம்.அந்த தேர்தலில் அவர் 1 லட்சத்து 7ஆயிரத்து 903 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

கடந்த தேர்தலில் தான் கோட்டை விட்டு விட்டார்.

’’பாஜக மீது அதிருப்தி நிலவுவதால் அமேதியில் காங்கிரஸ் அலை வீசுகிறது. வரும் தேர்தலில் ராகுல் அமேதியில் போட்டியிட்டால் எளிதாக வெல்வார்’ என்கிறார், காங்கிரஸ் எம்.எல்.சி. தீபக் சிங்.

உத்தரபிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள், ராகுலை நேரில் சந்தித்து அமேதியில் போட்டியிடுமாறு அழைக்க உள்ளனர்.

அமேதியில் களம் இறங்க ராகுலும் தீர்மானித்து விட்டார்.

உச்சநீதி மன்ற தீர்ப்பு அவரை உற்சாகப்படுத்தியுள்ளது.
000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *