ஆகஸ்டு,20 .
நிலவில் தென் துருவத்தில் முதலில் இறங்கப் போவது இந்தியாவின் சந்திராயன் – 3 விண்கலமா அல்லது ரஷ்யாவின் லூனா விண்கலமா என்பதை அறிய உலகம் முழுவதும் பெரும் ஆர்வம் நிலவுகிறது.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14- ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இதே தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா, லூனா-25 விண்கலத்தை பத்து நாட்களுக்கு முன்பாக இந்த மாதம் ஆகஸ்ட் 11-ம் தேதி அனுப்பியது.
இரண்டு நாடுகளின் விண்கலன்களும் ஒரே நோக்கத்திற்காக அனுப்பப்பட்டாலும் சந்திராயன்-3 விண்கலம் 22 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. ஆனால் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் ஏவப்பட்ட 6- வது நாளிலேயே நிலவின் சுற்றுப்பாதைக்குள் சென்றுவிட்டது.
சந்திராயனுக்கு 22 நாட்கள் தேவைப்பட்ட நிலையில் லூனாவால் மட்டும் ஆறு நாட்களில் எப்படி நிலவின் சுற்றுப்பாதையை அடைய முடிந்தது என்ற கேள்விக்கு விண்கலன்களின் எடை, எரிபொருள், திட்டசெலவு ஆகியவை பயண நேரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக இந்திய விஞ்ஞானிகள் பதில் தெரிவித்து உள்ளனர்.
ரஷ்யாவின் லூனா 1,700 கிலோ எடை கொண்டது. அது புவிவட்ட பாதையில் சுற்றாமல் எரிபொருளின் உதவியுடன் மட்டுமே உந்தி தள்ளப்பட்டு நிலவின் சுற்றுவட்டபாதையில் நுழைந்து விட்டது. இந்தியாவின் சந்திராயன்- 3 விண்கலம் 3,900 கிலோ எடை கொண்டது. அது பூமியின் சுற்று வட்டப் பாதையை 5 முறை சுற்றி புவி ஈர்ப்பு விசையின் உதவியுடன் சுற்றிய பிறகுதான் , எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. லூனா-25 விண்கலத்தைப் போன்றே பயணம் செய்வதாக இருந்தால் சந்திராயன்- 3 ன் திட்டச் செலவு 3 மடங்கு அதிகம் ஆகியிருக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
பூமியின் 14 நாட்களின் மொத்த நேரந்தான் நிலவின் ஒரு பகல் பொழுது ஆகும். சூரிய வெளிச்சம் இருக்கும் போது தரையிறக்கினால் மட்டுமே ஆய்வுகளை துல்லியமாக மேற்கொள்ள முடியுமாம். இதனை கருத்தில் கொண்டே சூரிய வெளிச்சம் நிலவில் படும் நேரத்தைக் கணக்கிட்டு, விக்ரம் லேண்டரை 23- ம் தேதி தரையிறக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
ஆனால் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க ரஷ்யா தேர்வு செய்துள்ள இடத்தில் சூரிய ஒளி படுவது முன்கூட்டியே தொடங்கும் என்பதால், இந்தியாவுக்கு முன்பாகவே லூனா-25 தரையிறக்கப்பட உள்ளது.
இதனிடையே கடைசி தகவல்படி லூனாவில் சில தொழில் நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு உள்ளது. அதனை சரி செய்யும் வேலைகளை மேற்கொண்டு இருப்பதாக ரஷ்யா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
நல்லபடியாக தரை இறக்கினால் சரிதான்.
000