மே.8
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ-மாணவியரில் 94.03 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை.
தேர்வுகள் அனைத்தும் முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 79 மையங்களில் நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, மாணவ-மாணவியரின் மதிப்பெண்கள் பாடவாரியாகப் பதிவேற்றப்பட்டு, முடிவுகளை வெளியிடுவதற்குத் தயார் நிலையில் இருந்தன.
இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணாநூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி இன்று வெளியிட்டார். இதில், 8.03 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 7,55,451 லட்சம் மாணவ-மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதம். இவர்களில் மாணவியர் 4,05,753 (96.38%) பேர். மாணவர்கள் 3,49,697 (91.45%) பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கம்போல், இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், 97 சதவீதத் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.