13 மணி நேரம் விருது வழங்கி விஜய் சாதனை. எப்படி முடிந்தது விஜயால் ?

நடிகர் விஜய் , பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி விருதுகளை 13 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வழங்கி அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்து உள்ளார்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் + 2 மற்றும் 10 ஆம் வகுப்பில்
முதல் மூன்று இடங்களைப் பிடித்து இருந்த மாணவர்களுக்கு விருது கொடுப்பதற்கு அவர்களை விஜய் சென்னைக்கு அழைத்திருந்தார். நீலாங்கரையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரங்கத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு விழா ஆரம்பமானது.

சுமார் 20 நிமிடங்கள் பேசி முடித்தப்பிறகு விருதுகளையும் ஊக்கத்தொகையையும் வழங்க ஆரம்பித்தார்.

முதலில் +2 தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் எடுத்திருந்த சாதனை மாணவி திண்டுக்கல் நந்தினிக்கு வைர நெக்லசை பரிசாக கொடுத்தார். பிறகு மேடையில் இருந்து இறங்கிச் சென்று மாற்றுத் திறனாளி மாணவியான ஆர்த்திக்கு பரிசு கொடுத்து அவருடன் படம் எடுத்துக் கொண்டார். பிறகு ஒவ்வொரு மாணவ மாணவியையும் மேடைக்கு அழைக்கச் சொல்லி தமது கையால் பரிசுகளைக் கொடுக்க ஆரம்பித்தார்.

பெற்றோருடன் வந்திருந்த மாணவச் செல்வங்களுக்கு தலை வாழை விருந்தும் தரப்பட்டது.

காலை 11 மணிக்கு விருதுகளை கொடுக்க ஆரம்பித்த விஜய் இரவு 12 மணி வரை சளைக்காமல் விருதுகளையும் ஊக்கத் தொகையையும் அளித்தார். இது ஒரு சாதனை நிகழ்வாகும். ஒரு கட்டத்தில் அவரே சோர்வுற்று மேசையைப் பிடித்தப்படி நின்றதும் அனைவரும் பதைத்துப் போனார்கள்.

இது போன்ற விழாக்கள் என்றால் நம்ம அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் முதல 10 பேருக்கு மட்டும் விருதுகளை தங்கள் கையால் கொடுத்து படம் எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். ஆனால் விஜய் அப்படி செய்யவில்லை. தன்னுடைய அழைப்பை ஏற்று சென்னை வந்த மாணவச் செல்வங்களுக்கு தன்னுடைய கைகளால் மணிக்கணக்கில் நின்று கொண்டே விருது கொடுத்து புதிய சாதனையை படைத்து உள்ளார்.
ஒரு தொகுதியில் +2 வில் மூன்று பேர் 10 ஆம் வகுப்பில் மூன்று பேர் என்றால் 243 தொகுகளிலும் 1458 பேர்கள் ஆவார்.
யோசித்துப் பாருங்கள்1458 பேருக்கு ஒருவரே தொடர்ந்து விருது கொடுப்பது சாத்தியமா என்று.
முன்னதாக விழவில் பேசிய விஜய்,மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட வேண்டாம் என்று சொல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

இது பற்றி அவர் பேசியதாவது …

நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்து கொண்டு இருக்கிறோம் . பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பதை தான் சொல்கிறேன்.

உதாரணமாக ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள்; ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது. ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள். இதெல்லாம் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள். இது நடக்கும் போது தான் உங்கள் கல்வி முறை முழுமை அடைந்ததாக எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு விஜய் கூறினார்.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ‘Naa Ready’ என சிங்கிள் பாடல் குறித்து சொல்லப்பட்டது.

இந்நிலையில், கல்வி விருது வழங்கும் மக்கள் இயக்க நிகழ்வில் நடிகர் விஜய் பங்கேற்று சாதனை செய்துள்ளார். இது இரண்டையும் வைத்து பார்க்கும் போது குறிப்பால் தனது அரசியல் வருகையை விஜய் வெளிப்படுத்துகிறார் என்ற கருத்தை எழச் செய்கிறது.

அதற்கு அறிகுறியாக நடிகர் விஜய் 3 விஷயங்களை செய்துள்ளார். ஒன்று அம்பேத்கர் பிறந்தநாள் அன்று 234 தொகுதிகளிலும் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உத்தரவிட்டார். அது போல் உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்குமாறு தெரிவித்திருந்தார். அது போல் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் தொகுதி வாரியாக
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி இருக்கிறார். இது அவர் அரசியலுக்கு வருவதற்கு ரெடியாகிவிட்டதை வெளிப்படுத்து வதாக உள்ளது.
000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *