ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒன்றுப்பட்டுச் செயல்படுது என்று பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்தக் கூட்டத்தை சிம்லாவில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதலமைச்சருமான நிதீ்ஷ்குமார் கடந்த பல மாதங்களாக கடுமையான முயற்சிகளை செய்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார. பாட்னாவில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடை பெற்றக் கூட்டத்தில் 15 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், மேற்கு வங்க முதலமைச்சரும் திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மிக் கட்சியைச் சேர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், சாமாஜ்வாதி கட்சித் தலைவரும் உ.பி.யின் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் மற்றும் சிவசேனா, ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், சிவசேனா, தேசிய மாநாடு, காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூட்த்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். உடல் நலக்குறைவுக் காரணமாக கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவும் கூட்டத்தில் பங்கேற்று இருந்தார்.
சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் நாட்டின் ஜனநாயகத்துக்கும் மதச் சார்பின்மைக்கும் பேராபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். எனவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது அவசியம் என்றும் கூறினார்கள்.
கூட்டத்தின் முடிவில் நிதீஷ்குமார், கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினார்கள். விமானத்திற்கு நேரமாகிவிட்டதால் மு.க.ஸ்டாலின் பேட்டியில் கலந்து கொள்ளவில்லை.
அப்போது சிம்லாவில் ஜுலை 12 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகிப்பார் என்று நிதீஷ்குமார் தெரிவித்தார். மேலும் அவர் இ்ன்றையக் கூட்டத்தில் பாரதீய ஜனதாவை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுத்து உள்ளோம் என்றார்.
வேறுபாடுகள் இருந்தாலும் கருத்தியல் அடிப்படையில் இணைந்து உள்ளோம் என்று ராகுல் காந்தி சொன்னார்.
காந்தியை தான் ஆதரிப்போம், கோட்சேவை அல்ல என்று மெகபூபா முக்தி தெரிவித்தார்.
அமலாக்கத்தறை,சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை பாரதீய ஜனதாஅரசு எதிர்கட்சிகளுக்கு எதிராக பயனப்டுத்துகிறது. இவை அனைத்துக்கும் எதிராகப் போராட வேண்டியுள்ளது. அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.ஒற்றுமையாக தேர்தலைச் சந்திப்போம். பாட்னா கூட்டம் வரலாற்றை மாற்றி எழுதும். பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதன் பிறகு இந்தியாவில் தேர்தலே நடைபெறாது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு முதலமைச்சர்களும் பங்கேற்கவில்லை. அதற்குப் பதில் அந்தக் கட்சி வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், டெல்லி மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் பாரதீய ஜனதா அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன் கேள்வி எழுப்பி உள்ளது.
இருந்தாலும் நிதீஷ்குமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டம் பெரும் வெற்றியைப் பெற்று உள்ளது. அடுத்தடுத்தக் கூட்டங்களில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
000