மே.24
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 16வது ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டியில் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றிபெற்றது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின.
‘டாஸ்’ ஜெயித்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி ருதுராஜ் கெய்க்வாட்டும், டிவான் கான்வேவும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். குஜராத்தின் பவுலர்களின் நெருக்கடியை திறம்பட சமாளித்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் தனது 4-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கு 172 ரன்களை எடுத்தது. பின்னர் 173 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு குஜராத் அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சஹாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய குஜராத் அணி 157 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்துவைத்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 10வது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி சென்னைசூப்பர் கிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அமதாபாத்தில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடரந்து, இன்றைய வெளியேற்றுதல் சுற்றில் லக்னோ-மும்பை அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு பலப்பரீட்சை நடத்தவுள்ளன.