மே.26
சென்னையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுக்கான முதல் தகுதிப்போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி, விதிகள் குறித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தில், தோனி உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
16வது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்றுவருகின்றன. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றுவருகிறது. அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்திருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடின.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து, 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 10வது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்குள் சென்னை அணி நுழைந்தது. இந்த போட்டியின்போது தோனி, விதிகள் தொடர்பாக நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
போட்டியின் நடுவே பந்து வீச்சாளர் பதிரனா மைதானத்தை விட்டு சில நிமிடங்கள் வெளியேறினார். ஐபிஎல் நிபந்தனைகளின்படி, மைதானத்திலிருந்து ஓய்வு எடுக்க செல்லும் வீரர், குறிப்பிட்ட நேரத்திற்குள் களத்திற்குத் திரும்ப வேண்டும். தவறினால், 9 நிமிடங்களுக்கு பின்னரே அவர் பந்து வீச அனுமதி வழங்கப்படும். ஆனால், பதிரனா மைதானத்திற்கு திரும்பியதும் பந்து வீச தயாரானார்.
பத்திரனா 4வது நிமிடத்தில் பந்து வீசத் தயாரானதை நடுவர்கள் அனுமதிக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால், கேப்டன் தோனி நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த சம்பவத்தில், கால தாமதத்தை ஏற்படுத்துவதற்காக தோனி உள்நோக்கத்துடன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தால், இறுதி போட்டியில் அவர் விளையாட தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால், தோனி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.