பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கலவரத்தில் இது வரை காவல் துறை அதிகாரிகள் 200 பேர் காயம் அடைந்து உள்ளனர். தீவைப்பு, கொள்ளை அடிப்பது, சாலைகளில் தடுப்புகளை போட்டு போக்குவரத்தை முடக்குவது போன்ற செயல்கள் நான்கு நாட்களாக நீடிக்கிறது.
முந்தைய இரவுகளுடன் ஒப்பிடும்போது வெள்ளிக்கிழமை இரவு நிலைமை சற்று அமைதியானதாகத் தோன்றினாலும், நாடு முழுவதும் பல நகரங்களில் கொந்தளிப்பான சூழல்தான் காணப்படுகிறது.
பாரிஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரேவில் கடந்த செவ்வாய்கிழமை அன்று போக்குவரத்து போலிஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதால் நாகெல் என்ற 17 வயது இளைஞன் உயிரிழந்ததால் மூண்ட கலவரம் இன்னும் ஓயவில்லை. வளைதளங்களில் பரவிய நாகெல் கொலைக் காட்சி பிரான்ஸ் நாட்டு மக்களை பெரும் கொந்தளிப்பு அடையச் செய்துவிட்டது.
அந்த இளைஞன் மோதுவது போல காரை ஓட்டிவந்ததால் சுட நேரிட்டதாக போலிசார் தெரிவிக்கின்றனர். அப்போது சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தவர்கள் போலிசார் காருக்குள் துப்பாக்கியை விட்டு உன்னை சுட்டுக்கொல்லப் போகிறோம் என்று அச்சுறுத்தியதாக கூறுகின்றனர்
நஹெலின் உடல் அடக்கம் இன்று (சனிக்கிழமையன்று) நடைபெற உள்ளதால் கலவரம் மேலும் தீவிரம் அடையும் என்ற அச்சமும் நிலவுகிறது.
கொலம்ப்ஸ் என்ற இடத்தில் எதிர்ப்பாளர்கள் குப்பைத் தொட்டிகளைக் கவிழ்த்து, அவற்றை தற்காலிக சாலைத் தடுப்புகளுக்குப் பயன்படுத்தி போரட்டத்தை நடத்தினார்கள்
ஒரு சில இடங்களில் துப்பாக்கிக் கடைக்குள் நுழைந்தவர்கள் ஆயுதங்களை எடுத்துச் சென்றுவிட்டனர். இவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர், மேலும் தெற்கு மத்தியதரைக் கடல் துறைமுக நகரமான மார்சேயில், வன்முறையில் ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
கிழக்கு நகரமான லியோனில் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டன, அங்கு கைது செய்யப்பட்ட 30 பேரில் மூன்றில் 10 பேர் திருட்டுக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளதாக போலிசார் தெரிவித்தனர். அங்கு வியாழக் கிழமை மாலையில் 1,000- க்கும் மேற்பட்டவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்ட போது தீ வைப்புகளும் நடைபெற்றன..
கிழக்கு நகரமான ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஆப்பிள் கடை சூறையாடப்பட்டது, அங்கு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், பாரிஸ் நகரத்தில் வணிக வளாகத்தில் உள்ள துரித உணவு கடை ஒன்றின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மூடப்பட்டு இருந்த அந்தக் கடைக்குள் நுழைய முயன்றவர்களை போலிசார் விரட்டியடித்தனர்.
இந்தக் கலவரம் பிரான்ஸ் நாட்டுடன் நின்றுவிடாமல் அதன் ஆளுகைக்கு உட்பட்ட மற்ற இடங்களிலும் பரவியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய தீவான ரீயூனியனில் வெள்ளிக்கிழமை எதிர்ப்பாளர்கள் குப்பைத் தொட்டிகளை எரித்த பின்னர், போலீசார் மீது கற்கள வீசி தாக்கினார்கள். கார்கள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தினார்கள். பிரெஞ்சு கயானாவில், வியாழன் இரவு, தலைநகர் கயென்னில் கலவரக்காரர்கள் காவல்துறையை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், 54 வயதுடைய ஒருவர் குறி தவறிய தோட்டாவால் கொல்லப்பட்டார்.
000