ஏப்ரல்.20
கோவை மாநகராட்சியில் 20 இடங்களில் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் நிலையங்கள் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி கூட்டரங்கில் கோவை மாநகராட்சி மற்றும் டாடா பவர் நிறுவனம் இணைந்து கோவை மாநகரில் 20 இடங்களில் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் டாடா பவர் நிறுவன விற்பனை தலைவா் வீரேந்திர கோயல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோவை மாநகராட்சியில் பெருகி வரும் மின்சார வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பல நன்மைகள் ஏற்படுகிறது. இதனை, மேலும் அதிகரிக்கும் நோக்கத்தோடு கோவை மாநகராட்சியில் 20 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, அரசு வழிகாட்டுதலின்படி கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் டாடா பவர் நிறுவனம் ஒருங்கிணைந்து சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
சார்ஜிங் நிலையங்களில் TATA POWER EZ CHARGE Application வழியாக சார்ஜிங் நிலையங்களை கண்டறிதல், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்தல், அதற்கான கட்டணங்களை செலுத்துதல் உள்ளிட்டவை TATA POWER EZ CHARGE Application வழியாக மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வாகனத்திற்கு 60 நிமிடத்தில் 80% வரை சார்ஜிங் செய்ய இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் 4 இடங்கள், அவினாசி சாலை வ.உ.சி. பூங்கா பகுதியில் 2 இடங்கள், வாலாங்குளம் பகுதியில் 2 இடங்கள், பெரியகுளம் பகுதியில் 1 இடம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் 3 இடங்கள், சரவணம்பட்டியில் 1 இடம், புரூக் பீல்ட்ஸ் அருகே மாநகராட்சி வானக நிறுத்துமிடம் 1, சிங்காநல்லூரில் 1 இடம், அவினாசி சாலை டைடல் பாரக் அருகே 1 இடம், காந்திபுரம் கிராஸ்கட் சாலை அருகே 1 இடம், காளப்பட்டி சாலையில் 2 இடங்கள், துடியலூரில் 1 இடம் ஆகிய 20 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்ச்சியில், டாடா பவர் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் அர்விந்த் சுப்பிரமணியன், டாடா பவர் கம்பெனி லிட், சேனல் பார்ட்னர் தமிழ்நாடு கோகுல கண்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.