2024 ஜனவரியில் 2வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

June 08, 23

2-வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று, 2024-ம் ஆண்டுக்கான சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் தேதியை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “எழுத்தாளர்களின் படைப்புகள், இலக்கியங்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

உலகத்தில் இருக்கின்ற எந்த மொழியாக இருந்தாலும், அம்மொழியில் உள்ள நல்ல எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளை நாம் கொண்டாடும் விதமாகவும், அந்த படைப்புகளை தமிழ் மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாகவும் சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்துகிறோம். 2023-ம் ஆண்டு சர்வதேச புத்தகக் கண்காட்சியை குறுகிய காலகட்டத்தில் நடத்தினோம். அப்போது 24 நாடுகளில் இருந்து 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றை நடைமுறைப்படுத்த மொழிபெயர்ப்பு மானியமாக ஏறத்தாழ ரூ.3 கோடியை தமிழக அரசு வழங்க இருக்கிறது. கருணாநிதி நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு மானியம் வழங்குவதை பெருமையாகக் கருதுகிறோம். 2024-ம் ஆண்டு சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜன. 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்படும். அதிகமான அரங்குகளை அமைக்கப்படும். புத்தகக் கண்காட்சியில் மதிப்புறு விருந்தினராக மலேசியா நாட்டை அழைக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *