தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை திமுக உறுதிசெய்துள்ளது.
2024 ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டு வருகிறது. அதன்படி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என உறுதி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பாஜக-வுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேசுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பிஆர்எஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.