இந்தியாவின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது சினிமாவில் நீண்ட நாட்கள் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது நாம் அறிந்தததுதான். சரி, அந்த விருதுக்கு ஏன் தாதா சாகேப் பால்கே என்று பெயர் வந்தது?பால்கே என்பவர் யார்?
தாதா சாகேப் பால்கே இன்றைய மராட்டிய மாநிலத்தில் நாசிக்கில் 1870 ஆம் ஆண்டு பிறந்தவர். இளமையில் புகைப்படக் கலை கற்றார். பிறகு ரவி வர்மாவிடம் ஓவியம் பழகினார். மேஜிக் வித்தைகளை செய்யத் தெரிந்து கொண்டார். கற்கும் ஆர்வம் அவருடன் பிறந்திருந்தது.
பால்கேவுக்கு 26 வயது ஆகும் போது அதாவது 1896 ஆம் ஆண்டில் பம்பாய் நகரத்தில் ஓட்டல் ஒன்றில் ‘கிறிஸ்துவின் வாழ்வு’ என்ற படத்தை மக்களுக்குப் போட்டுக் காட்டினார்கள். இது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட படம். இதன் பிறகுதான் இந்திய மக்களுக்கு சினிமா என்றால் என்ன என்பது ஓரளவு தெரிய வந்தது. இதனைப் பார்த்தவுடம் பால்கேவுக்கும் சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
மனிதர் பம்பரமாக வேலை செய்யத் தொடங்கினார். கேமிரா ஒன்று வாங்கி படம் பிடிக்க கற்றுக் கொண்டார். சினிமா கொட்டகைளில் வேலைப் பார்த்து சினிமா நுட்பங்களைப் பழகினார்.
என்ன கதையை படம் எடுப்பது என்று நண்பர்களுடன் யோசித்தார். அந்த கால கட்டத்தில் அரி்ச்சந்திரா நாடகம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக இருந்தது. அதையே சினிமாவுக்கான கதையாக எழுதினார். ஆனால் சந்திரமதி போன்ற முக்கியமான வேடங்களில் நடிக்கக் கூட எந்த பெண்ணும் முன் வரவில்லை. ஏனென்றால் அந்த கால கட்டத்தில் சினிமாவில் நடிப்பதையோ மரியாதைக் குறைவாக கருதினார்கள்.
விலை மகளிர் சிலரை சந்தித்து அரிச்சந்திரா படத்தில் நடிக்க வாருங்கள் என்று கூப்பிட்டார். அவர்களும் நடிக்க விருப்பமில்லை என்று போய்விட்டார்கள். பால்கே அசரவில்லை. தமது குடும்பத்தினர் 18 பேருக்கு நடிப்புச் சொல்லிக் கொடுத்தார். பெண் வேடத்திலும் ஆண்களையே நடிக்கச் செய்தார். படத்தை தயாரித்து முடிக்க ஏழு மாதங்கள் ஆனது.
பால்கேவின் இயக்கத்தில் உருவான அரிச்சந்திரா திரைப்படம் 1913 ஆம் ஆண்டு வெளியானது. அவரின் உழைப்பு வீ்ண் போகவில்லை. அரிச்சந்திரா படம் மக்களின் வரவேற்பை பெற்றது.
பிறகு பால்கே இந்துஸ்தான் என்ற பெயரில் சினிமா கம்பெனியை தொடங்கி 75 படங்களை தயாரித்தார்.. சினிமா தொழிலும் வளர்ந்து கொண்டே போனது.புதுப் புது ஆட்கள் சினிமா தயாரிக்க முன் வந்தார்கள். போட்டி கடுமையாக இருந்தது. பால்கேவால் சமாளிக்க முடியவில்லை. எல்லா சாதனையாளர்களைப் போல அவரையும் வறுமை சூழ்ந்தது. மனைவியின் நகைகளை விற்று படம் எடுத்தார். அவர் தமது 74 வது வயதில் அதாவது 1944 ஆம் ஆண்டில் காலமானார்.
இந்தியாவின் முதல் சினிமாவை தயாரித்தவர் என்பதால் அவர் இந்திய சினிமாவின் தந்தை என்று போற்றப்படுகிறார். பால்கேவை போற்றும் வகையில் அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வாழ்நாள் சாதனை செய்த வர்களுக்கு தாதா சாகேன் பால்கே விருதை இந்திய அரசாங்கம் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. பத்து லட்சம் ருபாய் ரொக்கமும் சான்றிதழும் தரப்படுகிறது.
தமிழ் நாட்டில் இருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியார் தாதா சாகேப் பால்கே விருதுகளை பெற்று உள்ளனர்.
இன்னும் சில சினிமா சாதனையார்களைப் பற்றி பார்க்கலாம்