ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 264 பேர் உயிரிழந்துள்ளனர். 900-திற்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோரவிபத்துக்கு காரணம் மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா என்பதை பார்க்கலாம்.
ஒடிசா மாநிலம் பாலசூர் அருகே நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.30 மணி அளவில் இந்த ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. சாலிமரிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகி தடம் புரண்டது. அதேவேலை பெங்களூருவிலிருந்து ஹவுரா வரை செல்லும் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும், விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் மூன்று ரயில்களும் ஒன்றோடு ஒன்று மோதியதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.
இதில் கோரமண்டல் விரைவு ரயிலின் 5 பெட்டிகள் முற்றிலும் நிலைகுலைந்தன. இந்த விபத்து நடந்த பின்பு அப்பகுதியில் மீட்பு பணிகள் நடந்தது. இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்க கவச் என்ற ஒரு பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கவச் என்ற கருவி ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதாமல் பாதுகாக்கும் என இந்திய ரயில்வேயால் அறிவிக்கப்பட்டிருந்தது இந்த கருவி இருந்த போதும் இந்த ரயில்கள் விபத்தில் சிக்கியது எப்படி என்ற கேள்வி பலருக்கு எழுகிறது.விபத்து நடந்த இடத்தில் கவச் தொழிற்நுட்பம் இல்லை என்பதும் ஒரு முக்கியமான தகவல்.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ரயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பின்னர் டெல்லியில் இருந்து புறப்பட்டு ஒடிசா வந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பிரதமரை விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், விபத்துக்கான காரணம் குறித்தும் பாதிப்பு குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் விளக்கினர். அவருடன் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனிருந்தனர். அதன் பின் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதன் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி “விபத்தால் ஏற்பட்ட வேதனை குறித்து விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. விபத்து தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. விபத்துக்கு காரணமானவர்களுக்கு உரியத் தண்டனை வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.