பிப்வரி -05,
கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளிக் கூடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி கர்ப்பமான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மாணவி ஒரு மாதமாக பள்ளிக்கு வராததை அடுத்து அவருடைய வீட்டுக்குச் சென்று தலைமை ஆசிரியர் விசாரித்து இருக்கிறார். அப்போது மாணவியின் தாயார், தமது மகளின் கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதால் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் கொடுத்த அழுத்தத்தை அடுத்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரி் பேரில் கர்ப்பத்திற்கு அதே பள்ளியின் ஆசிரியர்கள் காரணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை கைது செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் போது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில்…
‘அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, ‘எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்’ என்று சொன்ன ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?”
என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை அதில் பங்கேற்பதற்காக அழைத்துச் சென்று பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் சில மாதங்கள் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குள் இப்போது நடந்து உள்ள நிகழ்வு மாவட்டத்தை அதிரச் செய்து உள்ளது.