”அண்டை மாநிலத்திலிருந்து விதவிதமாகப் போதைப்பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய கேந்திரமாக புதுச்சேரி மாறியிருக்கிறது”- புதுச்சேரி அ.தி.மு.க
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலம் முழுக்க முழுக்க இரவு நேர மதுபான பார்கள், ரெஸ்டோ பார்கள், கடைகள் திறந்திருப்பதால் சட்டம் – ஒழுங்கு முழுமையாகச் சீர்கெட்டுக் கிடக்கிறது. மதுபான பார்களும், ரெஸ்டோ பார்களும் இரவு 2 மணிவரை திறந்திருப்பதால் இளம் பெண்களும், இளைஞர்களும் மது போதைக்கும், கஞ்சாவுக்கும் சர்வசாதாரணமாக அடிமையாகியிருக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 2:30 மணியளவில் இளம்பெண்ணுடன் ஐந்து பேர் குடித்துவிட்டு, நடு வீதியில் சாலையில் பைக்கில் சென்ற ஓர் இளைஞரை தங்களது குடித்திமிரால் இழுக்க முயற்சி செய்திருக்கின்றனர்.
அந்த முயற்சியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். வெளிமாநிலத்திலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளால் புதுச்சேரி மாநில மக்களைப் பாதுகாக்க முடியாத சூழல் காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது. வருமானத்துக்காக இரவு நேரங்களில் கடை வைத்துக்கொள்ளலாம் என அரசு கூறியிருக்கிறது. இதனால் சட்டம் – ஒழுங்கு முழுவதுமாகச் சீரழிந்திருக்கிறது. அண்டை மாநிலத்திலிருந்து விதவிதமாகப் போதைப்பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய கேந்திரமாக புதுச்சேரி மாறியிருக்கிறது. அறைகுறை ஆடைகளுடன் பெண்கள் நகரப்பகுதிகளில் சுற்றித் திரிகின்றனர். இதற்கெல்லாம் அரசு அனுமதி கொடுப்பது என்பது நியாயமற்ற செயல்.
புதுச்சேரியைப் பொறுத்தமட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அரசை செயல்படுத்திவருகிறார். பல்வேறு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் இவர், இது போன்ற செயல்களையும் அனுமதிக்கலாமா… இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். முதலமைச்சர் நினைத்தால் உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியும். கூட்டணிக் கட்சியில் இருப்பதால், இது போன்ற அநாகரிகமாக நடத்தப்படும் பார்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு கோரிக்கை வைக்கிறோம்.
இந்திய அளவில் தங்குதடையின்றி போதைப்பொருள் விற்பனை மாநிலமாக புதுச்சேரி திகழும் என்பதில் ஐயமில்லை. எனவே, முதலமைச்சர் ரங்கசாமி இரவு நேரத்தில் ரெஸ்டோபார், கலாசார சீரழிவு நடப்பவைகளை ரத்துசெய்ய வேண்டும்.
பெண்ணாக இருக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் தனக்கிருக்கும் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து இது போன்ற கலாசாரச் சீரழிவைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறோம். பாலியல் தொழிலைத் தூண்டக்கூடிய ஸ்பா, மசாஜ் கிளப் போன்றவற்றின் அனுமதியை துணைநிலை ஆளுநர் உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்க்கை சீரழிவதைத் தடுக்க, எடப்பாடியார் அனுமதி பெற்று அ.தி.மு.க மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்” என்றார்.