கர்நாடக மாநிலத்தில் கர்நாடக பால் கூட்டமைப்பு, அம்மாநில விவசாயிகளிடம் இருந்து பாலை மொத்தமாக வாங்கி நந்தினி என்ற பிராண்ட் பெயரில் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனம் கர்நாடக சந்தையிலும் களம் இறங்க உள்ளதாக அறிவித்தது. தலைநகர் பெங்களூருவில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும் என்று அமுல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து அமுல் பால் விற்பனைக்கு எதிர்க்ககட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நந்தினி பால் விற்பனையை முடக்கவும், கர்நாடக பால் கூட்டமைப்பை அழிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று ஹசன் நகரில் உள்ள நந்தினி பால் விற்பனையகத்துக்கு சென்றார். அங்கு நந்தினி பால் பொருட்களை வாங்கி தனது ஆதரவாளர்களுக்கு விநியோகித்து நந்தினி பிராண்ட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: அமுலை விட சிறந்த பிராண்டான நந்தினி நம்மிடம் உள்ளது. நமக்கு எந்த அமுலும் தேவையில்லை. நம் தண்ணீர், நம் பால் மற்றும் நமது மண் வலிமையானது.
கர்நாடகாவில் விவசாயிகளின் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் உற்பத்தி செய்து நந்தினிக்கு கொடுக்கின்றனர். குஜராத்தின் அமுலும் விவசாயிகளால்தான். ஆனால் அமுல் முன்னோக்கி,நந்தினியை பின்னோக்கி தள்ளுவது சரியல்ல. பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நமது உற்பத்தியையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசு அனைத்து பால் பொருட்களின் விலையையும் உயர்த்தியது, விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதற்கிடையில் பால் விற்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.