400 தொகுதிகளில் பொதுவேட்பாளர்களை நிறுத்தினால்.. பா.ஜ.க. என்னவாகும் தெரியுமா?

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ,பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 17 கட்சிகள் கரம் கோர்த்து வரும் மக்களவை தேர்தலில் மோடியை வீழ்த்தியே தீருவது என பீகாரில் சங்கற்பம் எடுத்துள்ளனர்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முஸ்தீபுகளில் இறங்கியபோது, மோடி, அமித்ஷா வகையறாக்கள் ‘இது என்ன சிறு பிள்ளை விளையாட்டு’ என்றே எள்ளி நகையாடினர்.

ஆனால் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பது, பா.ஜ.க.வின் தூக்கத்தை தொலைத்து விட்டது.

நிதிஷ்குமார் இல்லத்தில் சில தினங்களுக்கு முன் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான முக்கிய தலைவர்கள் திரண்டனர்.

ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த்மான்,ஹேமந்த் சோரன் ஆகிய முதலமைச்சர்களோடு,ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே,லாலு பிரசாத் யாதவ், சரத்பவார்,அகிலேஷ்யாதவ்,உத்தவ் தாக்கரே,உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகிய சக்திமிக்க தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். சீதாராம் எச்சூரி, டி.ராஜா ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த தலைவர்களிடையே கொள்கை முரண்கள் இருப்பினும், வரும் மக்களவை தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது என தீர்மானித்திருப்பது பா.ஜ.க.வை நிஜமாகவே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பீகாரில் அசைக்கமுடியாத செல்வாக்குள்ள ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் சிங்கப்பூரில் சிறுநீரக ஆபரேஷன் நடந்துள்ளது.பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் சொன்ன அறிவுரையை புறக்கணித்து இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

அவரது பங்களிப்பு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது

400 தொகுதிகளில் போட்டி

நாடு முழுமைக்கும் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன.எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து இடங்களிலும் பொதுவேட்பாளர்களை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டாலும், அது சாத்தியமில்லை. .

கேரளாவில் கம்யூனிஸ்ட் அணியில் காங்கிரஸ் சேர்வது நடக்காத காரியம்.டெல்லி,பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மியுடன் இணைந்து காங்கிரஸ் பயணிக்க முடியாது.மேலும் சில மாநிலங்களிலும் இது போன்ற சிக்கல்கள் உண்டு.

எனவே 17 கட்சிகளும் சுமார் 400 தொகுதிகளில் பொதுவேட்பாளர்களை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.இப்படி ஒரு போட்டி உருவானால் பா.ஜ.க. நிச்சயம் பாதிக்கப்படும்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற 16 கட்சிகள் கடந்த மக்களவை தேர்தலில் வெவ்வேறு கூட்டணியில் சங்கமித்து களம் கண்டன.

அவை மொத்தமாக 38 சதவீத வாக்குகளை பெற்றன. ஆனால் கைக்கு கிடைத்த தொகுதிகளோ வெறும் 153.

மாறாக 37. 7 சதவீத ஓட்டுகளை வாங்கி 303 இடங்களை பா.ஜ.க. அள்ளியது.

பாட்னாவில் மேற்கொண்ட சூளுரையின் படி, 17 கட்சிகளும் ஒரேஅணியில் கை கோர்க்கும் பட்சத்தில் ,பா.ஜ.க.வுக்கு பெருத்த சேதாரம் ஏற்படும்.

போட்டி எப்படி இருக்கும்?

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹரியானா, இமாச்சலபிரதேசம்,சத்தீஷ்கர், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் மட்டுமே பிரதான கட்சிகள்.எதிர்க்கட்சிகள் மத்தியில் இந்த மாநிலங்களில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் வராது.இந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் அணிக்கு காங்கிரசே தலைமை தாங்கும் என மம்தா பானர்ஜியே சொல்லி விட்டார்.

காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக இல்லாத தமிழ்நாடு, மகாராஷ்டிரா,ஜார்க்கண்ட், பீகார், திரிபுரா போன்ற மாநிலங்களில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் கொடுக்கும் இடத்தை காங்கிரஸ் பெற்றுக்கொள்வதை தவிர வேறுவழி இல்லை.

கர்நாடகாவில் முடிவு

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுத்த மாதம் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இதில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *