தாசில்தார் ஒருவர் 1000 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை குவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து இருக்கிறார். அதுவும் 42 வயதாகும் இந்த தாசில்தார் வேலையில் சேர்ந்து ஏறத்தாழ 15 ஆண்டுகள்தான் ஆகின்றன.
அஜித்குமார் ராய் என்ற இவர் பெங்களூர் கே.ஆர்.புரம் தாசில்தார். கர்நாடக மாநில லோக் ஆயுக்தா ( லஞ்ச ஒழிப்பு) போலிசார் மாநிலம் முழுவதும் கடந்த புதன் கிழமை அன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மாநில அரசு அதிகாரிகள் 15 பேருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில ஏராளமான சொத்து ஆவணங்கள,ரொக்கம் , தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனையின் உச்சமே அஜித்குமார் ராய் வீட்டில் கிடைத்த ஆவணங்கள் தான். இவர், பெங்களூர் மற்றும் புறநகரில் வீடுகள், வீட்டு மனைகளை தன் உறவினர்கள் பெயரில் வாங்கிப் போட்டு இருப்பது முதலில் தெரியவந்தது. மேலும் அவருடைய வீட்டில் ரூ 40 லட்சம் ரொக்கம், 100 சவரன் தங்க நகைகள், 2 சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள்கள், 64 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், ஏராளமான வெளிநாட்டு மது பாட்டில்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
பெங்களூர் புறநகர் மாவட்டமான தொட்டபள்ள புராவில் மட்டும ஒரே இடத்தில் 90 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதற்கான ஆவணங்களையும் லோக் ஆயுக்தா போலிசார் சேகரித்து உள்ளனர். இந்த நிலத்தின் மதிப்பு மட்டுமே 300 கோடி ரூபாய். இந்த இடத்தில் குதிரைப் பந்தய பயிற்சிப் பள்ளி ஒன்றை தொடங்குவது என்பது அவரின் திட்டமாகும்.
இது மடடுமல்லாமல் கல்லூரு என்ற கிராமத்தில் 32 ஏக்கர் நிலம், தேவனஹள்ளியில் 18 ஏக்கர் பரப்ளவு கொண்ட பண்ணை வீடு ஆகியவையும் அஜித்குமார் ராய்க்கு சொந்தமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. மலைக்க வைக்கும் இந்த சொத்துகளின் மதிப்பு ரூ 1000 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அவர் வேறு எங்கேயாவது சொத்துகள் வாங்கி போட்டு இருக்கிறாரா என்று விசாரணை நடைபெற்ற வருகிறது.
இதனை அடுத்து அவரை, லோக் ஆயுக்தா போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைக்குச் சேர்ந்த 15 ஆண்டுகளிலேயே ஆயிரம் கோடிக்கு சொத்துகளைச் சேர்த்த அஜித்குமார் ராய் தான் கர்நாடகத்தில் அனைத்து மட்டங்களிலும் பேசப்படும் நபராக இருக்கிறார்.
000