மே.30
தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அந்த மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும்படி மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆட்சிக்காலம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்துடன் முடிகிறது. அதன்படி, மிசோரமில் மாநில சட்டசபை ஆட்சிக்காலம் வருகிற டிசம்பர் 17-ந் தேதியோடு முடிவடைகிறது. தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மத்தியபிரதேச சட்டசபைகளின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிகிறது.
தற்போது, மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும், தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மத்தியபிரதேசத்தில் பா.ஜனதாவும், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் காங்கிரசும் ஆட்சியில் இருந்துவருகின்றன.
இந்நிலையில் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள இந்த 5 மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.அதில், 5 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், புதிதாக சிறப்பு தொகுப்பு ஆய்வுகளை நடத்தி வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாநிலத்தின் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, தகுதிப்படுத்தும் நாளை அடிப்படையாக கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், வரும் அக்டோபர் 1-ந் தேதி அல்லது அதற்கு முன்பாக 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.