டி.ஆர். பாலுவின் மகனுக்கு அமைச்சர் பதவியை வழங்கி இருப்பது திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியது தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா இன்று காலை பதவியேற்றார். முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்ப பிரமாணமும் அவருக்கு செய்து வைத்தார். இதை தொடர்ந்து தமிழக நிதி துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மூன்று அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தங்கம் தென்னரசு வசம் இருந்த தொழில்துறை புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டிஆர்பி ராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜிடம் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய அமைச்சரவை தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாவது: திராவிட மாடல் என்பது சமூக நீதியை அடிப்படையாக கொண்டது என்று தி.மு.க.வைச் சேர்ந்த தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடலின் அடிப்படை சமூக நீதி என்றால், அது சமமான நீதியாக இருக்க வேண்டும். பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் ஒருவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி அல்லது அமைச்சரவையின் முக்கிய இலாகாக்களில் ஒன்றை வழங்க வேண்டும் என்று தமிழகத்தின் முதலமைச்சருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அவர்கள் கட்சியில் இருக்கின்ற ஒரு தலைவரின் மகனை அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியது தான் என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. இவ்வாறு கூறினார்.