June 04, 2023
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு வார கால சுற்றுப்பயணமாக, உதகை வந்துள்ளதையடுத்து, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் ஜூன் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஆளுநர் ஆர். என். ரவி, அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக சாலை மார்க்கமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வருகை தந்தார்.
ஒரு வார பயணமாக உதகைக்கு வருகை புரிந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 9ம் தேதி வரை உதகை ஆளுநர் மாளிகையில் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆளுநர் தலைமையில் நாளையும், நாளை மறுநாளும் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆளுநரின் வருகையை ஒட்டி உதகையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநரின் வருகையால் வார விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் பூங்காவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஆளுநரின் வாகனம் சென்ற பிறகு சுற்றுலா பயணிகள் பூங்காவில் இருந்து வெளியேறினர்.