திருநின்றவூரில் ரயிலை கவிழ்க்க சதி? தண்டவாளத்தில் தென்னை மரத்துண்டு…

திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் தண்டவாளத்தில் தென்னை மரத்தை குறுக்கே போட்டு ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் மார்க்கமாக ரயில் இன்ஜின் இரவு நேரத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி ரயில் என்ஜின் ஒன்று சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது திருநின்றவூர் ரயில் நிலையத்தை கடந்த போது இன்ஜினில் முன் பகுதியில் மரத்துண்டு ஒன்று சிக்குவதை கண்ட ஓட்டுநர் உடனடியாக ரயில் என்ஜினை நிறுத்தியுள்ளார். ரயில் ஓட்டுநர் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது தண்டவாளத்தில் தென்னைமர கட்டை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த மரத்துண்டை எடுத்து அண்ணனூர் ரயில்வே பாதுகாப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து இது குறித்து புகார் செய்து சென்றார்.

இதுகுறித்து விசாரணையை துவக்கிய திருவள்ளூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அதில் திருநின்றவூர் நேரு நகர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டி ரயில் தண்டவாளம் அருகே உள்ள குப்பையில் போட்டுள்ளனர். இந்த தென்னைமர கட்டையை நள்ளிரவில் மர்ம நபர்கள் தண்டவாளத்தில் வைத்து சென்றது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும் ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் 5க்கும் மேற்பட்டோரை பிடித்து திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குடிபோதையில் மர்ம நபர்கள் தண்டவாளத்தில் மரக்கட்டையை வீசி சென்றார்களா அல்லது ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி போடப்பட்டதா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்த வடு இன்னும் மறையாத நிலையில், திருநின்றவூரில் ரயில் விபத்தை ஏற்படுத்த நடைபெற்ற சதி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *