செப்டம்பர்,04-
மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. அவைகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ( செவ்வாய்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 8 மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தலுக்கான பரிசோதனைக்களமாக அமைந்துள்ளது.
திரிபுராவில் இரு தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.பாக்சாநகர் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. அண்மையில் காலமனார். தான்பூரில் பாஜக எம்.எல்.ஏ. ராஜினாமா செய்து விட்டார்.இதனால் இரு இடங்களுக்கு
தேர்தல்.இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஜே.எம்.எம்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஜார்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதியின் ஜே.எம்.எம். கட்சி எம்.எல்.ஏ.மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது.
திரினாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மே.வங்காளத்தில் உள்ள தூப்குரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ.மறைவையடுத்து அங்கு தேர்தல் நடத்தப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள கோஷி தொகுதியை சேர்ந்த
சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. ஆளும் பாஜகவில் சேர்ந்து விட்டார்.எனவே அங்கு இடைத்தேர்தல்.உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடக்கிறது.அங்குள்ள பாகேஷ்வர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
கேரளாவில் உள்ள புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கோட்டை. முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தொடர்ச்சியாக 50 ஆண்டுகளாக வென்று வந்த தொகுதி. சாண்டி மரணம் அடைந்ததால் அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
கேரளவைத்தவிர மற்ற மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும்இடையே பலத்த போட்டி நிலவுகிறது.இரு கூட்டணிகளுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் முக்கியமானதாகும்.
யாருக்கு ஜெயம்? நாளை மறுநாள் தெரியும்.
000