இந்தியக் குழந்தை ஒன்றை ஜெர்மன் நாட்டு அரசாஙகம் பறித்துக்கொண்டது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சினிமாவை போன்றே இந்த நிகழ்வும் நடந்து இருக்கிறது.
MRS.CHATTERJEE vs NORWAY என்ற திரைப்படம் இப்போது ஓ.டி.டி.தளத்தில் மிகவும் பிரபலமான படமாகும். இந்த படத்தின் கதை கொல்கத்தாவை சேர்ந்த திருமதி. சாட்டர்ஜி, நார்வே நாட்டில் வசிக்கிறார். குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருடைய இரண்டு குழந்தைகளையும் நார்வே அரசு காப்பகத்தில் சேர்த்துவிடுகிறது. அந்த குழந்தைகளை மீட்க திருமதி சாட்டர்ஜி நடத்தும் போராட்டந்தான் படத்தின் கதை.
இதே போன்றது தான் அரிகாவின் கதையும்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாவேஷ் ஷா மனைவி தராவுடன் ஜெர்மனியில் பெர்லின் நகரத்தில் வசித்து வந்தார். அவர்களுடைய 7 மாதப் பெண் குழந்தைக்கு திடீரென பிறப்பு உறுப்பில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினார்கள். அவரும் சிகிச்சை அளித்தார். அப்போது நின்றுப் போன ரத்தக் கசிவு மறுநாளும் ஏற்பட்டது.
மீண்டும் மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அவர், ஏதே ஒரு சந்தேகத்தின் பேரில் அந்தக் குழந்தையை பெரிய மருத்துவமனை க்கு கொண்டுச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்த பெற்றோர் செலவைப் பற்றி கவலைப் படமால் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துப், போனார்கள். அங்கு அரிகாவை சோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளிட்டனர். அது மட்டுமில்லாமல் ஜெர்மனி நாட்டு குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பி வைத்தார்கள். உடனே அதிகாரிகள் விரைந்து வந்து 7 மாத அரிகாவை பெற்றோரிடம் இருந்து பிரித்து அரசாங்க காப்பகத்தில் ஒப்படைத்து விட்டனர்.
அதிர்ந்துப் போன பாவேஷ்-தாரா தம்பதி புகார் கொடுத்தார்கள்.ஜெர்மனி மருத்துவர்கள் நினைப்பது போல குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளாகவில்லை. ஏழு மாத குழந்தையை யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று வழக்கறிஞர் மூலம் வாதாடினார்கள்.
விசாரணைக் குழு பல்வேறு தரப்புக் கருத்துகளையும் கேட்டு அரிகா பாலயில் தொல்லைக்கு ஆளாகவில்லை என்று அறிக்கை கொடுத்தது. ஆனால் இதன் பிறகும் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப் படவில்லை. பாவேஷாவும் தாராவும் ஜெர்மனியில் அனைத்து மட்டங்களிலும் முறையிட்டும் பயன் எதுவும் ஏற்படவில்லை.
இப்போது டெல்லி வந்து ஒவ்வொரு கட்சி அலுவலகமாக ஏறி தலைவர்களைப் பார்த்து குழந்தை கிடைக்க உதவிடுமாறு மன்றாடி வருகின்றனர்.
இதையடுத்து திமுக, காங்கிரஸ், பாரதீய ஜனதா உட்பட 19 கட்சிகளைச் சேர்ந்த 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
இப்போது அரிகா 2 வயதுக் குழந்தை. அவள் பெற்றோரைப் பிரிந்தது கடந்த 2021 செப்டம்பரில். மாதம் இருமுறை அரிகாவை பெற்றோர் சந்தித்து வருகின்றனர். அவளுக்கு பெற்றோரை பார்க்கையில மகிழ்ச்சி தாங்கவில்லை. பார்த்தவுடன் ஓடிவந்த தாயுடன் ஒட்டிக் கொள்கிறாள். இவர்கள் கொண்டு போகும் இந்திய உணவை விரும்பிச் சாப்பிடுகிறாள்.
இந்த வழக்கில் ஜொமன் நீதிமன்றம் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு கூற இருக்கிறது. ஜெர்மன் நாட்டு காப்பகத்தில் உள்ள அரிகா அவளுடைய பெற்றோருக்கு மீண்டும் கிடைப்பாளா ?