June 16, 23
அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
சட்டவிரோத பணமோசடி வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகக்கள் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் தெங்கம் தென்னரசுவுக்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செந்து இருந்தார். ஆனால் அந்த பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ள்ளார்.