தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு சங்கமும் வலிமையானது. அவர்கள் ஒரு முடிவெடுத்து விட்டால் , அது ‘நாட்டாமை’ தீர்ப்பு போன்று உறுதியாக இருக்கும். உச்சநடிகரும் அதனை மீற முடியாது.
முப்பது ஆண்டுகளுக்கு முன் ’ஃபெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ரெட் கார்டு கொடுத்தது. திரை உலகை தாண்டி ரஜினிக்கு செல்வாக்கு இருந்ததால், அந்த தடையை மீறி அவர் உழைப்பாளி படத்தில் நடித்தார். ஃபெப்சியில் அங்கம் வகித்தாலும் , சில யூனியன்கள் , ரஜினிக்கு ஒத்துழைப்பு அளித்தார்கள். படமும் முடிவடைந்தது. பின்னர் ஃபெப்சியுடன் ரஜினி சமரசம் செய்து கொண்டார்.
எல்லா நடிகர்களும் ரஜினி ஆகி விட முடியுமா?
வடிவேலுவும், ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு பிரச்சினையில் சிக்கினார். ஆனால் அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தார். வடிவேலுவை கதாநாயகனாக வைத்து இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். சிம்புதேவன் டைரக்ட் செய்தார்.
படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ என பெயரில் ஷங்கர் தயாரித்தார்.வடிவேலுதான் ஹீரோ. சிம்புதேவனே டைரக்ஷன். அந்த நேரத்தில் மேலும் சில படங்களில் நாயகனாக நடித்திருந்த வடிவேலு,ரஜினி ரேஞ்சுக்கு தன்னை உருமாற்றி இருந்தார்.
’கதையை மாற்று ..காட்சிகளை மாற்று.’என சிம்புதேவனை பாடாய் படுத்தினார்.சிம்புதேவன் வடிவேலுவின் யோசனையை ஏற்காததால் அந்த படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்தார், வைகைப்புயல். விஷயத்தை ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு சென்றார்.வடிவேலுவுக்கு ரெட்கார்டு போட்டது,தயாரிப்பாளர் சங்கம். இதனால் படங்களில் நடிக்க முடியாமல் ஆண்டுக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார், வடிவேலு.
தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பஞ்சாயத்தையடுத்து, லைகா நிறுவனம் , ஷங்கருக்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு அளித்து வடிவேலுவை மீட்டது. தங்கள் தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்படத்தில் நடிக்க வைத்தது.இப்போது வடிவேலு போன்ற சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறார், தனுஷ்.
தேனாண்டள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட தனுஷ், 20 கோடி ரூபாய் சம்பளமும் பெற்றுக்கொண்டார்.ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்தது.சில தவிர்க்க இயலாத சூழலால் ஷுட்டிங் தடைபட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடர, தேனாண்டாள் பிலிம்ஸ் முயற்சிக்க தனஷ் கால்ஷீட் கொடுக்க மறுத்துவிட்டார்.
அண்மையில் நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் தனுஷ் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தயாரிப்பாளர்களோடு நாசர் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.மொத்தமாக சம்பளம் வாங்கி விட் டு , நடிக்க மறுக்கும் தனுஷுக்கு ரெட்கார்டு போடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல பதிலை சொல்வதாக நடிகர் சங்க நிர்வாகிகள் உறுதி அளித்ததால், ரெட்கார்டு முடிவை தள்ளி வைத்து இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
இருபது கோடின்னா சும்மாவா தனுஷ் ?
000