ஜுலை,20-
கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட வாரிசு நடிகர்கள் களம் இறக்கி விடப்பட்டனர். ஓரிருவர் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் பல வாரிசு நடிகர்கள்,பெரிதாக ஜொலிக்கவில்லை .
அவர்கள் குறித்த செய்தி தொகுப்பு:
சிவாஜி கணேசன் அளவுக்கு சாதனை படைக்கவில்லை என்றாலும் அவர் மகன் பிரபு இன்றைக்கும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சின்னத்தம்பி போன்ற வெள்ளிவிழா படங்களை தந்துள்ளார்.
ஆனால் அவரது உயரத்தை மகன் விக்ரம் பிரபு எட்டவில்லை.இவர் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டாலும், பெரிய படங்கள் தரவில்லை.
முத்துராமனை அவரது மகன் கார்த்திக்,முறியடித்து விட்டார் என்று சொன்னால் தப்பு இல்லை.முதல் படமே (அலைகள் ஓய்வதில்லை) வெள்ளிவிழா. அதன்பிறகு, அக்னிநட்சத்திரம், கிழக்கு வாசல், வருஷம் -16 என ஏராளமான வெள்ளிவிழா படங்களை தந்த கார்த்திக், இப்போது வில்லன் வேடங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் அவரது மகன் கவுதம் ,தரமான படங்களை கொடுத்தாலும், அப்பாவை போல் ஸ்டார் அந்தஸ்தை பெற இயலவில்லை.
தியாகராஜன் மகன் பிரசாந்த், வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, ஜீன்ஸ் என நிறைய ஹிட் சினிமாக்களை கொடுத்தாலும், அவரது திறமை மற்றும் தோற்றப்பொலிவுக்கு இன்னும் பெரிய உயரத்தை எட்டி இருக்க வேண்டும்.
பாரதிராஜா மகன் மனோஜ், பாக்யராஜ் மகன் சாந்தனு ஆகியோர் பெரிய படங்களில் நடித்தாலும் அவை சின்ன வெற்றியை கூட கொடுக்கவில்லை என்பது சோகமே.
விஜயகுமார்-மஞ்சுளா நட்சத்திர தம்பதியின் மகன் அருண் விஜய் வித்தியாசமான கதைகளில் நடித்தாலும் அவர் டாப் ஸ்டார் ஆக முடியவில்லை.பல வெள்ளிவி்ழா படங்களை கொடுத்த மச்சான் ஹரியால் கூட அருணுக்கு சூப்பர்ஹிட் படம் தர முடியவில்லை.
சத்யராஜ் மகன் சிபிராஜ், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்,முரளி மகன் அதர்வா ஆகியோர் ,தங்கள் தந்தை கொடுத்த வெற்றியில் 10 சதவீதம் கூட தரவில்லை.
எம்.ஆர்,ராதா மகன் வாசு உயிர் போகும் தருணம் வரை உயரத்தில் இருந்தார். ராதாரவியும் பேர் சொல்லும் பிள்ளையாக இருக்கிறார்.
ஆனந்த்பாபு வந்தார்.போனார்.
எஸ்.ஏ.அசோகன் மகன் வின்செண்ட், பத்தோடு பதினொன்று.
வந்தவரெல்லாம் ஜெயித்து விட முடியுமா?
வெற்றி சிலருக்கு மட்டும் சாத்தியமாயிற்று.
000