சிறையில் செந்தில் பாலாஜிக்காக வசந்த மாளிகை .. ஜெயக்குமார் கணிப்பு .

ஜூலை, 22-
தேர்தல் வாக்குறுதியில் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் இப்போது டோக்கன் முறையில் விநியோகித்து வருவது கண்டனத்திற்கு உரியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

மதுரையில் அதிமுக நடத்த உள்ள மாநாட்டுக்கான தீர்மானக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது…

மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாயை வாங்குவதற்கு 1008 கண்டிஷன்களை இந்த அரசு போடுகிறது. திமுக அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் என்று கூறுவதாக சொல்கிறார்கள்.

வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால் ஆயிரம் ரூபாய் இல்லை என்றும் கூறுகிறார்களாம்.

இதனால் ஏற்படும் பெண்களின் கோபம் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

செந்தில் பாலாஜிக்கு சிறையில் ‘ஏ’ வகுப்பு வசதியை நீதிமன்றம் கொடுத்துள்ளது
அந்த சலுகையை மட்டுமே அவருக்கு கொடுக்க வேண்டும். அவரை சிறையில் டி.ஐ.ஜி சந்தித்துப் பேசுவதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. செந்தில் பாலாஜிக்கு சிறையில் வசந்த மாளிகை போல வசதிகள் செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

அவர், மக்கள் வரி பணத்தில் இலாகா இல்லாத அமைச்சராக ஏன் தொடர வேண்டும்?

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் நீக்க மாட்டார். அப்படி நீக்கினால் ஆட்சி கவிழ்ந்துவிடும்.

மணிப்பூர் விவகாரம் பெண்மையை இழிவு படுத்தும் செயல். மத்திய அரசு இந்தப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையில் அரசு செயல்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். அத்தகைய தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்

மணிப்பூர் பற்றி பிரதமர் இத்தனை நாட்கள் கழித்து பதில் அளித்ததற்கு பாஜக தான் பதில் அளிக்க வேண்டும். இந்த கேள்வியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கேளுங்கள்.

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
…..

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *