ஜுலை,25-
மும்பை குண்டு வெடிப்பு,குஜராத் கலவரம் போன்ற பயங்கரவாத செயல்களுடன் தொடர்பு உள்ள தவ்ஃபிக் என்பவரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த இவர் சென்னை வந்த காரணம், போலிசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் அக்பர் என்பவர், ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை தவ்பிக் தெரிந்து வைத்துக்கொண்டு, என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து கடந்த 2020 ஆம் ஆண்டு அவரிடம் இருந்த 3 கோடி ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். இந்த வழக்கில் தவ்பிக்கின் மனைவி சல்மா உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய குற்றவாளியான தவுபிக்கை பிடிப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்தும் அவன் பிடிபடவில்லை. இதனால் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் நீதிமன்றம் மூலம் லுக் அவுட் நோட்டீஸ் பெற்று அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த தவுபிக் விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் சிக்கிக் கொண்டார். அவர்கள் கொடுத்த தகவல் பேரில் பின்னர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் கடந்த 2020- ல் தொழிலதிபர் அக்பரை கடத்தி பறித்த பணத்துடன் பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்று தலைமறைவாக இருநத்து தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறையும் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு பணத்தை சேகரித்துக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவது இவரது வழக்கமாகும்.
பங்காள தேஷில் கொஞ்ச காலம் தங்கி இருந்த தவ்ஃபீக் போலி பாஸ்போர்ட் மூலமாக இலங்கைக்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
தவ்பீக் மீது 15 வழக்குகள் இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ளது. இவற்றில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளும் அடக்கம். டெல்லி புறநகரான நொய்டாவில் முதன் முறையாக கைது செய்யப்பட்ட தவ்பீக் 2015- ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதன்பின்பு சிறையில் இருந்து விடுதலையான தவ்பிக் நாம் மனிதர் கட்சி என்ற அரசியல் கட்சியை உருவாக்கி செயல்பட்டு வந்தார். அதன் பிறகு அக்பரை கடத்தி பணம் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றவர் இப்போது சென்னைக்கு யாருக்கும் தெரியாமல் வந்தது யாரையேனும் கடத்தவா அல்லது தீவிரவாதச் செயல்களில் ஈடுபடவா என்பது பற்றி போலிசார் விசாரித்து வருகின்றனர். தவ்பீக்கை போலீஸ் காவலில் எடுத்து கூடுதல் விவரங்களை சேகரிக்கவும் வடக்கு கடற்கரை போலீசார் திட்டமிட்டுள்ளனர். தீவிரவாத தொடர்புகள் இருப்பதால் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணை நடத்த உள்ளதகா கூறப்படுகிறது.
000