ஜுலை, 29-
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு துப்பாக்கி கொடுத்து மணிப்பூருக்கு அனுப்பி வைக்கச் சொன்ன பத்ரி சேஷர்த்ரி என்பவை பெரம்பலூர் மாவடட் போலிசார் கைது செய்து உள்ளனர்.
சென்னையை சேர்ந்த இவர் கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகத்தின் உரிமையாளரும் ஆவார். ஆர்.எஸ்.எஸ். இயக்கச் சிந்தனையாளரான பத்ரி கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்து பேசுகிறவராக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இதன் உச்சமாக மே மாதம் நான்காம் தேதி அங்கு இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி வன்முறையாளர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ காட்சி இரு வாரங்கள் முன்பு வெளியாகி நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய புகாரை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மத்திய அரசுக்கும் மணிப்பூர் அரசுக்கும் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். இரண்டு அரசுகளும் விரைந்து செயல்பட்டு கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த தலைமை நீதிபதி இல்லையேல் உச்சநீதிமன்றம் தலையிட நேரிடும் என்று எச்சரிக்கை செய்தார்.
இது பற்றி யூ டியூப் சேனல் ஒன்றில் கருத்து தெரிவித்த பத்ரி சேஷாத்ரி “மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம்” என்று அவதூறாக பேசியிருந்தார்.
ஆயிரம் ஆண்கள் முன்னிலையில் ஆடைகளை களைந்து நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், அந்த கொடுஞ்செயலில் ஈடுப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தலைமை நீதிபதி சொன்ன கருத்துக்கு எதிராக பத்ரி பேசியிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று வழக்கறிஞர் ஒருவர் பெரம்பலூர் மாவட்ட போலிசில் புகார் கொடுத்திருந்தார்.
இதையடுத்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலிசர் அவரை சென்னையில் வைத்து கைது செய்து உள்ளனர். பத்ரி பெரம்பலூர் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
சனி, ஞாயிறு நீதிமன்றங்கள் விடுமுறை என்பதால் பத்ரி ஜாமீன் கேட்டு திங்கள் கிழமைதான் மனு தாக்கல் செய்ய முடியும்.
000