ஆகஸ்டு,03-
சினிமா ஆசையில் வாழ்க்கையை தொலைத்து, இறுதி நாட்களில் வறுமையில் உழன்று மரணிப்பது கோடம்பாக்கத்தில் சகஜமாகி விட்டது.அவர்களில் ஒருவர் மோகன்.
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மோகன், சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் ’குள்ள’ கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். நான் கடவுள், அதிசய மனிதர்கள், அற்புதத்தீவு உள்ளிட்ட படங்களிலும் மோகன் நடித்துள்ளார்.
திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் 60 வயதான மோகன் சொந்த ஊருக்கு திரும்பினார்.அங்கிருந்து திருப்பரங்குன்றம் வந்தவர், பசிக்கொடுமையால் பிச்சை எடுத்து காலம் தள்ளினார்.இரு தினங்களுக்கு முன் மோகன், இறந்து போனார்.
திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் பிணமாக கிடந்த அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திபோதுதான், அது சினிமாவில் துணை நடிகராக நடித்த மோகன் என்பது தெரிய வந்தது..
மோகன் பையை சோதனை செய்தபோது, அவர் சினிமாவில் நடித்த ஸ்டில்கள் இருந்தன. மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மோகன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
சினிமா ஆசை சிலரை இமயத்திற்கு கொண்டு செல்கிறது. சிலரை அதள பாதாளத்தில் தள்ளி விடுகிறது என்பதற்கு மோகன் உதாரணம்.
000